நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக வெளியான இரண்டு கடிதங்கள் அடிப்படையில் முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த சம்பவங்கள் கொலையாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியாகி வருகிறது.
* கடந்த 2 ஆம் தேதி இரவு வீட்டை விட்டு சென்றவர் அதன்பின் காணாமல் போனதாக மகன் கருத்தையா உவரி காவல் நிலையத்தில் 3 ஆம் தேதி புகார் ஒன்றை அளிக்கிறார். அதற்குபிறகு 4 ஆம் தேதி அவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். உடலை மீட்ட போலீசார் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் 2 ஆம் தேதி திசையன்விளை அருகே பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் உள்ளே சென்று வரும் வீடியோ காட்சிகள் வெளியானது. அதுவே அவரின் இறுதி நிமிடங்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின் அவர் எங்கு சென்றார். என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
* அதோடு அவர் உயிரிழந்து கிடந்த இடத்தில் அவரது செல்போன்களும் இல்லை, அவரின் அடையாள அட்டையான ஆதார்கார்டு போன்றவை மட்டும் கிடந்துள்ளது. அவரது செல்போன் எங்கே? என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் இன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை முற்றிலும் எரிந்து போய் இருப்பதும், நுரையீரலில் எந்தவித திரவமும் இல்லை என தெரியவந்தது. அதாவது உயிரிழந்த நபரை எரியூட்டினால் தான் குரல்வளை முற்றிலும் எரிந்து போகும் , திரவங்கள் இருக்காது என மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனடிப்படையில் அவரை கொலை தான் செய்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அவரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், வயிற்றில் இரும்புத்தகடு இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
* ஒருபுறம் அவர் எழுதியதாக கூறப்பட்ட கடிதங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்குட்படுத்திய நிலையில் அது அவரின் கையெழுத்து தான் என்பதை உறுதி செய்தனர். ஜெயக்குமார் மரண வாக்குமூலம் என முன் கூட்டியே முக்கிய நபர்கள் சிலரின் பெயர்களை விரிவாக எழுதி வைத்திருந்ததும், அதில் தன்னை அவர்கள் மிரட்டி வருகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்ததும் அவருக்கு பிரச்சினை நெருக்கி விட்டதாலே இந்த கடிதத்தை எழுதியதாக தெரிகிறது. இதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என 30க்கும் மேற்பட்டோருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* இந்த நிலையில் புதிய திருப்பமாக ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் கொலை செய்யப்பட்டது சடலத்தின் புகைப்படம் வாயிலாக தெரிய வருகிறது. புகைப்படத்தில் ஜெயக்குமாரின் முகம், கழுத்து, கை, கால்கள் என அனைத்திலும் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டபடி வேறொரு இடத்தில் ஜெயக்குமாரை இரும்பு கம்பிகளால் கை, கால்கள் கழுத்தை கட்டி கொலை செய்து பின் காரில் அவரது வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டு தோட்டத்தில் எரித்து சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.. காவல்துறையினர் விரைவில் ஜெயக்குமார் கொலை செய்தற்கான காரணங்களை கண்டறிந்து கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும் என்பதே ஜெயக்குமாரின் உறவினர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் தற்போது வெளியாகியுள்ள ஜெயக்குமாரின் புகைப்படங்கள் மிகவும் கோரமாக இருப்பதால் அதை நாம் வெளியிடவில்லை..