கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு விண்வெளித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், நீட் தேர்வு விவகாரங்கள் குறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனம் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இஸ்ரோ அமைப்பின் சந்திரயான்-1 மற்றும் மங்கல்யான் திட்டத்திற்கான இயக்குநராக இருந்தவரும், தற்போதைய தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழக துணைத்தலைவருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அளித்த பதில்கள்:-   


கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு விண்வெளி ஆய்வுகளில் உலக அளவில் எந்த அளவிற்கு அதிகரிக்க தொடங்கி உள்ளது?


கோவிட் தொற்று காலத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழலில் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்ற நிலையால் கோவிட் தொற்று காலத்தில் மட்டும் 1800க்கும் அதிமான செயற்கைக்கோள்கள் உலகம் முழுவதும் அனுப்பபட்டுள்ளது.


உலகப்போர்களுக்கு பிறகு உலகம் முழுவதும் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்காக விமானத்தின் பயன்பாடு அதிகரித்தது. உண்மையான உலகப்போர் என்பது தற்போது கொரோனாதான்; தற்போது நிகழும் உண்மையான உலகப்போரான கொரோனா காலத்தில் கிரகம் விட்டு கிரகம் செல்வதற்கான ஆராய்ச்சிகள் நான்குகால் பாய்ச்சலில் சென்று கொண்டு இருக்கின்றன.


இந்தியாவின் சார்பில் இந்தியர்கள் எவ்வுளவு நாட்களில் விண்வெளியில் கால்வைப்பார்கள்?



ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர். ஆனால் இந்திய மண்ணில் இருந்தே இந்தியர்கள் விண்வெளிக்கு செல்வதற்கான சோதனை முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்காக பலகட்ட பயிற்சிகளை பெற்றே மற்ற நாடுகள் மனிதனை விண்வெளிக்கு அனுப்பி உள்ளனர். 2023ஆம் ஆண்டுக்கு பிறகு நாம் இதனை எதிர்ப்பார்க்கலாம்.


விண்வெளித்துறையில் தனியாரின் முதலீடு எந்த அளவிற்கு விண்வெளி ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது?


உலக அளவில் விமானத்துறையில் கூட தனியார் நிறுவனங்கள் வந்த பிறகுதான் சாதாரண மனிதர்களும் விமானத்தில் பயணிப்பதற்கான சூழல் வியாபார போட்டி காரணமாக உருவானது. அமெரிக்காவில் தற்போது இதே போன்ற சூழல் விண்வெளிக்கு செல்வதில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை செயற்கைகோள்களை ஏவுவதில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் ஆய்வான ககன்யான் திட்டம் வெற்றி பெற்ற பிறகு இந்திய விண்வெளித்துறையை ஆய்வுக்கு தனியார் முதலீடு வருவதற்கான வாய்ப்புகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. விண்வெளித்துறைக்கு தனியார் முதலீடு வரும்போது நிறைய இளைஞர்களுக்கான வாய்ப்புகளும் நிறைய கிடைக்கும்.


இந்தியாவில் விண்வெளித்துறையில்  முதலீடு செய்யும் அளவிற்கான தைரியமான முதலீட்டாளர்கள் இந்தியாவில் உள்ளனரா?


காலம் மாறுகிறது; அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நன்றாக செயல்பட்டாலும், நாசா உருவாக்கிய பல்வேறு உட்கட்டமைப்புகளையும் ஓய்வுபெற்ற விஞ்ஞானிகளையும் பயன்படுத்தியதான் அந்நிறுவனம் வளர்ந்துள்ளது. இதே போன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகி வருகிறது; திட்டட்ட உலக அளவிலான பணக்காரர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்.


தனியார் அமைப்புகள் பெரிதும் முதலீடு செய்ய திட்டமிடாத விண்வெளித்துறையை எலான் மஸ்க் தேர்ந்தெடுத்து அவர் உலகப்பணக்காரராக உருவெடுத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?



விண்வெளி என்பது ஒரு தங்கச்சுரங்கம்; மனிதகுலம் அடுத்த கட்டம் செல்ல வேண்டும் என்றால் இந்த பூமிப்பந்து பத்தாது; இந்த பூமிப்பந்தை தாண்டியும் நிலவு, செவ்வாய்க்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆசிய கண்டமும், ஐரோப்பிய கண்டமும் பத்தாமல், அமெரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் கண்டுபிடித்து மனிதகுலம் முன்னேறியதோ அதேபோல செவ்வாய்க்கும் நிலவுக்கு செல்வதற்கான வழி உள்ளது. அதனை எலான் மஸ்க் சிறப்பாக எடுத்துச் சென்று வருகிறார். அவர் மட்டுமின்றி எலான் மஸ்க்கிற்கு போட்டியாக ரிச்சர்ட் பிராண்ட்சன் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஆகியோரும் விண்வெளி ஆய்வில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவில் ’’நான் கருத்தை பதிவு செய்துள்ளேன் நீங்களும் கருத்தை பதிவு செய்யுங்கள்’’ என உங்கள் முகநூலில் பதிவிட்டிருந்தீர்கள்; அதற்கான காரணம் என்ன?            


தேர்தலின் போது ’’அனைவரும் வாக்களியுங்கள் அது நம் உரிமை என்று சொல்கிறோம்’’; ஆனால் எல்லோரும் அவரவர் விருப்பத்தின்படி வாக்களிக்கலாம், ஆனால் வாக்களிக்க வேண்டியது நமது கடமை, நான் ஓட்டுபோடுங்கள் என்று சொன்னேனே தவிர; நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்று சொல்லவில்லை. அதே போல்தான் நீட் தேர்வு விவகாரத்திலும் என்னுடைய கருத்தை நான் தெரிவித்துவிட்டேன், உங்கள் கருத்துகளை ’’ஏ.கே.ராஜன் குழுவில்’’ பதிவு செய்யுங்கள் என முகநூலில் பதிவிட்டேன்.



ஒரு குடிமகனாக இந்த கருத்தை தெரிவிப்பது நம்முடைய பொறுப்பு இது. அடுத்த தலைமுறை எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான இந்த முக்கிய முடிவில் என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நினைத்ததால்தான் ஏ.கே.ராஜன் குழுவில் எனது கருத்தை பதிவிட்டேன்.


தரமான மாணவர்களை தேர்வு செய்வதற்காகவே நீட் மாதிரியான ஒரு தேர்வு  தேவை என்ற கருத்துக்கு உங்கள் பதில் என்ன?


12 ஆண்டுகள் படித்து வரும் மாணவரை ஆராயாமல், ஒன்றரை மணி நேர தேர்வில் ஆராய முடியுமா? என்பது எனக்குள் எழும் கேள்வி, மாணவர்களின் 12 ஆண்டுகாலத்தில் ஏதாவது ஒரு தவறு நடந்தது என்றால் அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டுமே தவிர 12 ஆண்டுகள் படிக்காமல் ஒன்றரை மணி நேர தேர்வுக்கு தயாரானால் போதும் என்ற நிலையை உருவாக்குவது சரியானதாக இருக்காது.


இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுகள் நன்றாக வளரும், ஆனால் அதன் ஆரோக்கியம் என்ன என்பது நமக்கு தெரியாது. கோழிக்குஞ்சுகளை இறைச்சிக்காக வளர்ப்பது மட்டும் எப்படி சரியில்லையோ; அதே போல மாணவர்களை தேர்வுக்காக மட்டும் தயார் செய்வதும் சரியல்ல. இரண்டு மணி நேர தேர்வை வைத்து மாணவர்களை முடிவு செய்வது என்னுடைய அறிவுக்கு சரியானதா என்று தெரியவில்லை.



கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு அரசுப்பள்ளிகளில் இடைநின்றல் அதிகரித்துள்ளது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


நான் தமிழ் மொழியில் மட்டுமே என் பள்ளி காலம் முழுவதும் படித்தேன்; தாய் மொழிக்கல்வியோ அரசுப்பள்ளிகளோ எந்த காலத்திலும் சோடை போவதற்கான வாய்ப்புகள் இல்லை. தமிழ்நாடு அரசின் பாடநூல் திட்டங்கள் அனைத்தையும் படித்துப்பார்த்தேன், இவை அனைத்தும் சிறப்பாக உள்ளது.