மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் இன்றிரவு 8 மணிக்கு தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள்.
தாய்லாந்து நாட்டில் வேலை எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மருக்கு கடத்திச்செல்லப்பட்டனர். இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று இரவு 8 மணிக்கு இந்தியா அழைத்து வரப்பட இருக்கின்றனர்.
முன்னதாக, சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (21-9-2022) அன்று கடிதம் எழுதினார்/
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரிய வருகிறது.
ஆன்லைனில் சட்ட விரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வருகிறது. அவர்கள் அத்தகைய சட்ட விரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன.
அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளனர். அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர். மியான்மரில் சட்டவிரோதமாக சிறை பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களை மீட்க வேண்டும். மீட்டு, பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும். இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டைத் கோருகிறேன்''. இவ்வாறு தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு மியான்மரில் சிக்கித்தவிக்கும் 13 மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டது.