தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் சேலம் மத்திய மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் மாவட்ட செயலாளரும் , சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மற்றும் சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி வருகின்றனர். 



மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட மேட்டூர் கோனூர் பகுதியை சேர்ந்த மாணவர் தனுஷின் தந்தை சிவக்குமார் திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கண்டன உரையாற்றிய மாணவர் தனுஷின் தந்தை சிவகுமார், ”நீட் தேர்வில் உயிரிழந்த 25 குழந்தைகளின் தந்தையாக பேசுகிறேன். நீட் தேர்வு என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு தேவையில்லாத ஒன்று. நீட் தேர்வு என்பது பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடியும் தேர்வாக உள்ளது. நீட் தேர்வாள் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவ படிப்பு படித்தவர்கள் அனைவரும் சிறந்த டாக்டர்களாக உள்ளனர். மத்திய அரசு பல குழந்தைகளை பலி வாங்கியும் நீட் தேர்விற்கு செவி சாய்க்காமல் உள்ளது. நீட் தேர்வை நமது நாட்டில் இருந்து விரட்ட வேண்டும்” என்றார்.



”எனது மகன் பத்தாம் வகுப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்திருந்தான். அப்போதைய கவர்னர் என் மகனைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ஆனால் நீட் தேர்வு மூன்று முறை எழுதினான். நீட் தேர்விற்கு மட்டும் ஆண்டிற்கு இரண்டு லட்சம் வரை மூன்று ஆண்டுகள் செலவு செய்தேன். என் மகனிடம் நான் கூறினேன் மருத்துவ படிப்பு வேண்டாம், வேளாண் படிப்பு எடுத்து படிக்கச் சொன்னேன். ஆனால் என் மகன் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்விற்கு தயாராகி வந்தான். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றோம் கட் ஆப் மார்க் இல்லாததால் பணம் கட்டி சேரும் நிலையிருந்தது. ஆனால் என்னிடம் பணம் இல்லை. இதனால் என் மகன் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதுபோன்ற நிலைமை வேறு எந்த மாணவர்களுக்கும் வரக்கூடாது. எனவே நீட் தேர்வு வேண்டும். நீட் தேர்வில் இல்லாமல் இருந்தால் என் மகன் உயிரோடு இருந்திருப்பான். தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை வெளியேற்ற வேண்டும்” என கண்ணீர் மல்க பேசினார்.