தமிழ்நாட்டின் அமைச்சரவையில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில், முக்கியமான ஒன்று தொழில்துறை அமைச்சராக பதவி வகித்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை வழங்கப்பட்டதுதான். 2021ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே மக்கள் மத்தியிலும் ஊடங்களின் மத்தியிலும் பிரபலமான அமைச்சராக இருப்பவர் பழனிவேல் தியாகராஜன்.
அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அதிரடி:
இவர் வகித்து வந்த நிதித்துறை அமைச்சகம்தான் தங்கம் தென்னரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும், மற்ற துறை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்குவதில் பிடிஆர், தாமதித்து வந்ததுதான் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
சமூக நல திட்டங்களை செயல்படுத்தும்போது, அதற்கு நிதி ஒதுக்காமல் தேவையற்ற விளக்கம் கேட்டதாக பிடிஆர் மீது புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரிடம் இருந்த நிதித்துறை வேறு ஒருவருக்கு அளிக்கப்படலாம் என தகவல் வெளியானது. அதை உண்மையாக்கும் விதமாக நிதித்துறை அமைச்சகத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, பல்வேறு துறை செயலாளர்களும் மாற்றப்படலாம் என தகவல் வெளியான வண்ணம் இருந்தது. குறிப்பாக, முதலமைச்சரின் தனிச் செயலாளரான உதயச்சந்திரன் மாற்றப்படுவார் என தகவல் வெளியானது. முதலமைச்சருக்கு நெருக்கமாக கருதப்படும் உதயச்சந்திரன் மாற்றப்பட்டால், அவரின் இடத்திற்கு யார் வருவார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்:
கோட்டை வட்டாரத்திலிருந்து வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக ஐஏஎஸ் பணியிடை மாற்றம் நடந்துள்ளது. முதலமைச்சரின் தனிச் செயலாளரான உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த இடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை செயலாளராக உள்ள இறையன்பு, ஓய்வு பெற உள்ள நிலையில், அந்த இடத்திற்கு முருகானந்தம் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது. இச்சூழலில், முதலமைச்சரின் தனிச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
2022-23ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தபோது, அவரே பாராட்டு தெரிவித்த அதிகாரிதான் முருகானந்தம்.
யார் இந்த முருகானந்தம்?
கணினி அறிவியலில் இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த என்.முருகானந்தம், ஐஐஎம் லக்னோவில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். 1991ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்த இவர், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
கொரோனா காலத்தில், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டனர். அதில், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில், நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு சிறப்பாக செயல்பட்டவர் முருகானந்தம்.
கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மை செயலாளராக பதவி வகித்தார். திமுக அரசு அமைந்தவுடன் நிதித்துறை முதன்மை செயலாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நிதித்துறையில் அனுபவம் பெற்றவர்களே நிதித்துறை செயலாளர்களாக நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
கூடுதல் தலைமை செயலாளர்:
ஆனால், முதல்முறை நிதித்துறையில் அனுபவம் இல்லாத முருகானந்தம் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவர் உள்துறையின் முதன்மை செயலாளராக வர விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால், அவரால் உள்துறை முதன்மை செயலாளராக வர முடியவில்லை.
கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழு பட்ஜெட் தயாரிப்பில் என்.முருகானந்தம் முக்கிய பங்களிப்பை செலுத்தியதற்கு பலரால் பாராட்டப்பட்டார்.