தமிழிசை அப்ராணியும் இல்லை; அப்பாவியும் இல்லை - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தன் மாநிலத்து தமிழ் சகோதரிக்கு இன்னொரு மாநிலத்தில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை கண்டு மகிழும் கூட்டம் முரசொலி - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

Continues below advertisement

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை ஒன்று வெளியானது. அதில், அண்மையில் தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் அந்த மாநில அரசு தனக்கு உரிய மரியாதை தரவில்லை எனக் கூறியதை சுட்டிக்காட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும் ஆளுநர் தமிழிசையை சுட்டிக்காட்டி இந்த நிலை தமிழகத்திலும் ஏற்படலாம் என்று கட்டுரையில் வந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு தெலுங்கானா அரசு உரிய மரியாதை செய்ய தவறியதை அளிக்கவில்லை என்பதை சுட்டி காட்டியதை விமர்சனம் செய்து வெளியான முரசொலி கட்டுரை குறித்து தமிழிசை சௌந்தரராஜன், பதில் அறிக்கை கொடுத்துள்ளார்.

Continues below advertisement

அந்த அறிக்கையின் ஆரம்பத்தில், 'ஒவ்வொரு அடியையும் ஆழ அளந்து அடி எடுத்து வைத்து நடக்கும் என்னை காலில்லாத காவலாளியுடன் ஒப்பிடும் முரசொலிக்கு," என்று தமிழிசை தொடங்கியுள்ளார். "தமிழிசை அப்ராணியும் இல்லை. அப்பாவியும் இல்லை. என்னுடைய பேட்டி அழாகுறையான பேட்டி அல்ல. தெலுங்கானாவில் ஆளும் வர்க்கத்தின் அமைச்சர்களையும், முதலமைச்சரின் அரசியல் வாரிசுகளையும்  அலறவிட்ட பேட்டி. புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்த நான் வாய்விட்டு அழுவதும் தலைகுனிவதும்  என்னுடைய சரித்திரத்திலேயே இல்லை," என்றார் அவர்.

"தன் மாநிலத்து தமிழ் சகோதரிக்கு இன்னொரு மாநிலத்தில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை கண்டு மகிழும் கூட்டம் முரசொலி கூட்டமாக தான் இருக்க முடியும். முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணாவை பார்க்க மறுத்த அமெரிக்க அதிபர் நிக்சன், தன்னைப் பார்க்க விரும்பிய போது பெருந்தலைவர் காமராஜர் அதனை மறுத்தார்.

அண்ணாவைப் பார்க்க மறுத்த அதிபரை நான் பார்க்க மாட்டேன் என்றார். பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக ஆகும் வாய்ப்பு வரும்போது, எனது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அவரை ஆதரிக்கிறேன் என்று எதிர் அணியில் இருந்த மம்தா பானர்ஜி ஆதரவு கரம் நீட்டினார். அதேபோலத்தான், ஒரிசா முதலமைச்சர் பட்நாயக் அவர்களும் தான் என். டி. ஏ. அணியில் இல்லாத போதும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார். ஆனால், தன் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு அடுத்த மாநிலத்தில் மரியாதை கிடைக்கவில்லை என்பதை கண்டு மகிழும் கூட்டம் தான் முரசொலி கூட்டம்," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தெலுங்கானா அமைச்சரவையால் எம்.எல்.சி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட கௌஷிக் ரெட்டி, கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோற்று, ஆளும் கட்சியில் ஆறு வாரத்திற்கு முன் இணைந்தவர். அவரை கவர்னரின் சமூக சேவை அந்தஸ்து அல்லது  பிரிவின்கீழ் நியமிப்பது உகந்தது அல்ல என்று சுட்டிக் காட்டப்பட்டது. அதற்காகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டது. அதை ஆளும் வர்க்கமும் புரிந்துகொண்டு, அவர்களது தவறை உணர்ந்து அவர்களாகவே தகுதியான வேறு ஒரு நபரை பரிந்துரைத்தவுடன் அந்த கோப்புக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது. எந்த முட்டுக்கட்டையும் இடப்படவில்லை.

ஆளுநர் மோசமாக நடத்தப்பட்டார் என்பதற்கு மற்றுமொரு நிகழ்வு. பழங்குடியினர் திருவிழாவில் கலந்து கொள்ள துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் நேரடியாக வந்து அழைத்துவிட்டு அங்கே சென்று கலந்து கொள்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தரவில்லை. அங்கே சென்று வருவதற்கு ஹெலிகாப்டர் வேண்டும் என்று கேட்டு அனுப்பிய கோப்பிற்கு பதில் சொல்லவில்லை. அதனால் 800 கிலோமீட்டர் சாலை வழியாக பயணம் செய்தேன். ஆனால் முதலமைச்சர் 50 அல்லது 60 கிலோமீட்டர்களுக்கு கூட ஹெலிகாப்டரில் சென்று வருகிறார்.

குடியரசு தினத்தில் ஆளுநர் கொடியேற்ற வேண்டும், அணிவகுப்பு நடத்த வேண்டும் என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் மரபு. அதை விடுத்து, குடியரசு தினத்தை கவர்னர் மாளிகையிலேயே கொண்டாடிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அதற்கான ஆளுநர் உரையையும் அனுப்பவில்லை. அதற்கான அரசு ஏற்பாடுகள் எதையும் முறையாக செய்யவில்லை. முதலமைச்சரும், அமைச்சர்களும் அதிகாரிகளும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், மாவட்டத்தை ஆய்வு செய்ய போகும்போது ஆட்சியரும் டி.எஸ்.பி யும் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதை முரசொலி நியாயப்படுத்துகிறதா. தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர். வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்யும்போது ஏதோ ஒரு காரணத்துக்காக அங்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றால் அவர் பொறுத்துக் கொள்வாரா?

தொடர்ந்து பதிலளித்த அவர், தமிழிசைக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமை மற்றவர்களுக்கு ஒரு பாடம் என்கிறார்கள். தமிழர்,  தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு தமிழச்சிக்கு அநியாயம் நடக்கும்போது அதனை ரசித்து பிரசாரம் செய்யும் கூட்டமாக தான் இந்த முரசொலி கூட்டம் இருக்கிறது, என்று தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement