கரூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் எலக்ட்ரிகல் - எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் ஈடுபட்டு வந்த வடமாநில வியாபாரிகள் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டும், பகுதி முழுவதும் தடுப்புகள் வைத்து அடைத்தும் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் தமிழக அரசு கடந்த மாதம் இறுதியில் ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து அதன்படி கொரோனா தொற்றை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பற்றி படிப்படியாக குறைந்து வருகிறது. அதை தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி தமிழக முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து ஜூன் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் 11 மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டத்தில் சில அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி செய்திக்குறிப்பில் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து 11 மாவட்டத்தில் கரூர் மாவட்டமும் அடங்கும். மேலும், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனைக்கு இணங்க தீவிர முயற்சியால் ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் பொது மக்களுக்கு நாள்தோறும் மூன்று வேளை உணவும் வழங்கி வருகின்றனர். ஊரடங்கு தளர்வு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முருகநாதபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில வியாபாரிகள் எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி மறைமுகமாக விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், அவ்வாறு விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் கடைகளுக்கு பூட்டு போட்டனர்.
மேலும், தொடர்ந்து அப்பகுதியில் நடைபெறும் விற்பனையை தடுக்கும் விதமாக அப்பகுதி வழியாக பொதுமக்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக தடுப்புகள் வைத்து அடைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதனை கவனத்தில் கொள்ளாமல் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட கடைகளை திறந்து தங்களது வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் கடைகளை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.