சந்தனக்கடத்தல் வீரப்பனின் பிறந்தநாள் இன்று. வானப்பகுதியை தன் பகுதியாக்கி நீண்ட நாள் தலைமறைவு ஆட்சி நடத்தி வந்த வீரப்பன், அன்று தேடப்பட்டவர்; இன்று ஒரு தரப்பினரால் கொண்டாடப்படுகிறார். அந்த சர்சைகளுக்குள் நாம் செல்வதை கடந்து, வீரப்பன் உயிரோடு இருந்த காலத்தில் பல சுவாரஸ்ய கதைகள் அவரைச் சுற்றி வருவதுண்டு. அவரது படையில் இருந்த ஈழ ஆதரவு இயக்கமான தமிழ் தேசிய மீட்சிப்படயை சேர்ந்த முகில், முல்லை என்கிற யூடியூப் சேனலில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதோ அவரது பேட்டி...
‛‛போராளி தலைவன் சுப.முத்துக்குமார் தலைமையில் தமிழ் தேசிய மீட்சிப்படை என்கிற மக்கள் இயக்கத்தில் சேர்ந்து ஈழத்திற்கான விடயங்களை நிறைய சொல்லியிருக்கிறேன். நிறைய செய்திருக்கிறோம். வீரப்பனின் வனப்பகுதிக்கு செல்ல வேண்டும் என மேலிடத்தில் இருந்து எனக்கு கட்டளை பிறக்கப்பட்டது. நான் புறப்பட்டது ஒரு இரவு பயணம். பெங்களூரு சென்று அங்கிருந்து சாம்ராஜ் நகர் வழியாக குண்டல்பேட்டை போய், அங்கு ஒரு பள்ளியில் தங்க வைத்து அங்கிருந்து கல்மட்டிதொண்டி புரம் என்கிற வனப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர்.
பசவண்ணா என்பவர் தான் எங்களை வனத்திற்குள் அழைத்துச் சென்றார். எங்களை அழைத்து சென்ற காரணத்திற்காக அவர் சிறையில் இருந்தார் என்பதால் தான் அவரது பெயரை உச்சரிக்கிறேன். அவரை இப்போது வெளியே வந்து குடும்ப இல்லறத்தில் உள்ளார். அதிகாலை 3 மணியளவில் பனி சூழ்ந்த அந்த காட்டில் வீரப்பனை சந்தித்தேன். மூங்கில் தோப்பில் உறங்கிக் கொண்டிருந்த வீரப்பனை முதன் முதலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை பார்த்ததும், கட்டி அணைத்து ,முத்தமிட்டு நலமா என்று வீரப்பன் கேட்டார்.
அதிகாலை பொழுதியில் உடல்நிலை அசதியாக இருந்த நிலையில் எங்கள் சந்திப்பு நடந்தது. அதன் பின் உறங்கினோம். காலைய எழுந்ததும், முதல்நாள் சமைத்த சோறு கஞ்சியாக இருந்தது. முதல்நாள் சமைத்த பருப்பு சாம்பாரும் இருந்தது. இதை இரண்டையும் தான் அனைவரும் சாப்பிட்டோம். அதை உண்ணும் போது, நாடுகளில் கிடைத்த உணவை விட, காடுகளில் கிடைத்த அந்த உணவு திருப்தியாக இருந்தது. காலை 11 மணிக்கெல்லாம் மீண்டும் மூங்கில் காட்டில் சமையல் தொடங்கியது. எனக்கும் சமைக்க ஆசையாக இருந்தது. ஆனால், வந்த முதல்நாளே நாம் அதை கேட்கலாமா என்கிற தயக்கம் இருந்தது. பொறுந்திருந்து செய்யலாம் என அமைதி காத்தேன்.
இரண்டு, மூன்று நாட்கள் கழித்த பின், சுழற்சி முறையில் ஆளுக்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதன் பின் எனக்கும் பணி ஒதுக்கப்பட்டது. தெங்குமராட்ட என்ற பள்ளத்தாக்கில் தான் எனது முதல் மாத காலம் ஓடியது. அங்கு சென்று முதல் 17 நாட்கள் நான் குளிக்கவில்லை. நான் படித்த கல்லூரியில் அருகில் இருந்த மலை பகுதிகளில் ஏறி பழகியிருந்ததால், அங்குள்ள மலைகளில் ஏற முடிந்தது. ஆனாலும் அது அவ்வளவு எளிதாக இல்லை. 4 மாதங்களுக்கு பிறகே அவை எனக்கு எளிதானது.
முத்துக்குமார் ஒருவரை அழைத்துச் செல்கிறார் என்றால், அவர்கள் பற்றிய எல்லா விபரத்தையும் வீரப்பனிடம் கூறியிருப்பார். அதனால் தான் என் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது. வீரப்பன், சேத்துக்குழியை தவிர சந்திரன் அண்ணன் நல்ல நெருக்கமாக இருந்தனர். தமிழ்நாடு விடுதலை இயக்க படை மாறன் மற்றும் அவர் சார்ந்த தோழர்கள் எனக்கு காட்டில் நண்பர்களாக கிடைத்தனர். அனைவரும் ஒரு ரத்த உறவாக பழகினர். இன்றும் என்னுடன் பலர் நட்பில் உள்ளனர்.
ஈழத்தின் முதல் போராளி சிவக்குமார் பெயரை தான் எனக்கு வைத்தனர். தலைமறைவு இயக்கங்களில் எங்கள் பெயர்கள் மாற்றப்படும். அந்த வகையில் எனக்கு முகில் என்கிற பெயரில் நான் இயங்கினேன். நான் 60 நாள் வனத்தில் இருந்ததாக ஒரு ஊடகவியலாளர் கூறியிருக்கிறார். நான் எப்போது பேனேன், எப்போது வந்தேன் என்பது ரகசியமானது. அது இயக்கம் சார்ந்த ரகசியம். அதை கூற முடியாது. நான் இத்தனை நாட்கள் இருந்தேன் என்றால், அந்த தேதியை அவர் கூறட்டும்.
பேபி வீரப்பன் என்பவர் வீரப்பனுடன் பல ஆண்டுகள் இருந்தவர். அவர் இறந்துவிட்டார். மாதையனும் கழுத்தறுத்துக் கொண்டு தான் இறந்தார். ஆனால், போலீஸ் சுட்டுக்கொன்றதாக அப்பட்டமான பொய் சொல்லப்படுகிறது. யூடியூப்பில் பொய் பேசி வரும் அந்த நபர் எழுதிய புத்தகத்திலும் நிறைய பொய் உள்ளது. சேத்துக்குழியை நெஞ்சாங்குழியில் தான் சுட்டு வீழ்த்தினார்கள். நான் அதை நேரில் பார்த்தவன். ஆனால் தலையில் சுட்டதாக கூறுகிறார்கள். 303 ரக துப்பாக்கியை வைத்து தான் சேத்துக்குழியை சுட்டார்கள். அதை துளைத்து வெளியேறும் ரகம். வெறியேறிய அந்த தோட்டாவை நாங்கள் எடுத்தோம். தலையில் சுட்டிருந்தால் அது மண்டை ஓட்டில் சிக்கியிருக்கும். காவல்துறை என்ன சொல்கிறதோ... என்ன அறிக்கை தருகிறதோ அதை தான் அப்பட்டமான பொய்யாக பேசி வருகிறார் அந்த நபர். அவர் தான் போலீசின் உளவாளி. என்னை உளவாளியாக சித்தரிக்கிறார்.
நான் காவல்துறையை நம்புவதில்லை. குறிப்பாக அதிகாரி விஜயகுமாரை நான் நம்புவதில்லை. அவர் மிகப்பெரிய நடிகர். அவருடைய ஆங்கில புத்தகத்திலேயே பேபி வீரப்பனின் செயல்பாடுகளை விமர்சன் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இப்போது சிலவற்றை நான் குறிப்பிட வேண்டாம் என்பதால் மவுனம் காக்கிறேன். ஆனால் இன்னொரு நாள் அதை அனைத்தையும் கூறுவேன்.
இயக்கம் உடைந்ததாக யாரும் கூறமுடியாது. மத்திய அரசும், நீதிமன்றமும் தடை விதித்திருப்பதால் வெளியில் தெரியாமல் வைத்திருக்கிறோம். நாளை தடையெல்லாம் நீங்கிய பின் மக்கள் இயக்கமாக மீண்டும் களமிறங்குவோம். என்னை பேச வைப்பவர்களே என் தோழர்கள் தான். நான் வீரப்பனுடன் பழகியதை அறிந்த பலர் இன்றும் உள்ளனர். சேத்துக்குழிக்கு எனக்குமான உறவு புனிதமானது. வேட்டையாடும் முறை, பாதை வழி பயணிக்கும் முறையை அவர் தான் கற்றுக்கொடுத்தார்.
காட்டுக்குள் நான் பலமாதம் இருந்த போது பார்க்காத உளவு வேலையை, நான் ஏன் சிறைக்குள் சென்று பார்க்க வேண்டும். சிறையில் என்னுடன் முத்துக்குமார் உள்ளிட்ட பல தோழர்கள் இருந்தனர். நான் உளவாளியாக இருந்தால், முத்துக்குமார் என்னை எப்போதே புதைத்திருப்பார். எங்களுக்கு படையில் இருந்த துப்பாக்கி சித்தனை நான் குறை சொல்கிறேன். வீரப்பனின் குரலை தான் நான் இப்போது தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.
காவல்துறையில் நல்லவங்க இருக்கிறார்கள், இருக்கலாம். இங்கு எத்தைனையோ வாச்சாத்தி கிராமங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் போலீஸ் சிதைத்த கிராமங்கள் நிறைய உள்ளது. வருங்காலத்தில் அவற்றை நான் சொல்வேன்... அந்த மக்களையும் சொல்ல வைப்பேன். ஒரு படையை வழிநடத்துவதையும், போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் முறையைை எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் சேத்துக்குழி, அந்த வழியில் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதிகார வர்க்கத்திடம் மக்களுக்காக கேள்வி கேட்பேன். அது தான் வீரப்பனின் கனவு,’’
என்று அந்த பேட்டியில் முகில் என்கிற சிவக்குமார் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்