செலிபிரிட்டிகள் சேரும்போது கிடைக்கும் வெளிச்சம்... அவர்கள் பிரியும்போதும் கிடைக்கிறது. காரணம் அவர்கள் சார்ந்த தொழில், மற்றொன்று அவர்களின் பின்னணி. அப்படியொரு செலிபிரிட்டிகள்தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியில் மகளாக ஐஸ்வர்யா, பிரபல இயக்குநரின் மகன் என்பதை கடந்து முன்னணி நடிகராக தனுஷ். இந்த தம்பதி பிரியும் முடிவை எடுக்கும்போது, யாருக்கு தான் அதிர்ச்சியாக இருக்காது? ஒன்றல்ல இரண்டல்ல... 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களது வாழ்க்கை, பிரிவு என்கிற கட்டத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது. ஏன் இந்த பிரிவு? நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் ஏன் இந்த முடிவு? என பல கேள்விகள் எழலாம். இந்த முடிவில் பெரும் பங்கு ஐஷ்வர்யாவினுடையது என்கிறார்கள். 




தனுஷ்... தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் ஏன் ஹாலிவுட்டில் கூட நடிக்கும் அளவிற்கு களத்தில் பிஸியாக உள்ளார். மறுமுனையில் அவரது மனைவி ஐஷ்வர்யா, இயக்குநராகவும், கதாசிரியராகவும், சில சமயங்களில் நடனத்திலும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், திடீரென ஐஷ்வர்யாவின் பார்வை ஆன்மிகம் பக்கம் திரும்பியது. ரஜினியின் இமயமலை பயணத்தில் அவரும் உடன் பயணித்தார். அங்கு சென்று வந்த பின், ஐஸ்வர்யாவின் வாழ்விலும், எண்ணத்திலும் நிறைய மாற்றங்கள் வந்ததாக கூறப்படுகிறது. 



குறிப்பாக, யோகக்கலைகளில் அவர் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இது அதற்கு முன் ஐஷ்வர்யா முன்னெடுக்காத புதிய முயற்சி. இதை விரிவாக பேசுவதற்கு முன், கடந்த 2020 மார்ச் 8-ஆம் தேதி இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பேட்டியை ஒருமுறை நினைவூட்டுகிறேன்...




’’மும்பை போன்ற வடஇந்திய பெருநகரங்களில் பலரும் தங்கள் தொழிலுக்கு நிகராக உடல்நலத்தில் அக்கறை காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகம். ஆனால் அதை வெளிப்படையாக செய்வதில் பலர் தயக்கம் காட்டுகின்றனர். தயங்கி தயங்கி வீட்டுக்கு உள்ளேயே உடற்பயிற்சி செய்கின்றனர். அதை உடைத்து, பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்க முடிவு செய்தேன். பெண்களுக்காக ஒரு யோகா மையத்தை ஒருங்கிணைத்து நடத்தலாம் என ‛திவா யோகா’ மையத்தை தொடங்கினேன். நண்பர் சர்வேஷ் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். தியானம் தொடர்பான எனது இந்த தொடக்கப்புள்ளி, இனி படிப்படியாக உயரும்.


கடந்த முறை அப்பா உடன் இமயமலைக்குச் சென்று வந்தேன். பத்ரிநாத், கேதார்நாத் போன்ற தலங்களில் கால்படுவதே பெரிய வரம். அந்த வகையில் நான் பாக்கியசாலி. அப்பா உடன் அங்கே சென்றது , நடைபயிற்சி மேற்கொண்டது, தேநீர் கடைகளில் தேநீர் குடித்ததை மறக்க முடியாது. வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த பகுதிக்கு அனைவரும் சென்று வர வேண்டும்,’’




 என்று அந்த பேட்டியில் ஐஷ்வர்யா பேட்டியளித்திருந்தார். ஆன்மிகம் மற்றும் தியானத்தில் ஐஷ்வர்யாவுக்கு எழுந்த திடீர் ஈர்ப்புதான், குடும்ப வாழ்க்கையை அவர் வெறுக்க காரணமானதாக பேசப்படுகிறது. முழுமையான ஆன்மிகத்தை அவர் ஏற்க விரும்பியதாலும், யோக கலையில் தன்னை ஆர்ப்பணிக்க முடிவு செய்து, இல்லற வாழ்க்கையை துறக்க அவர் முடிவு செய்து தனுஷிடம் கூறியதாகவும், அதனை ஆரம்பத்தில் ஏற்காத தனுஷ்; பின்னர் ஐஷ்வர்யாவின் விருப்பத்திற்கு எஸ் சொன்னதாக கூறப்படுகிறது. 


இருவரின் பிரிவு முடிவு பற்றி ரஜினிக்கு தெரியவர, அவர் அவர்களை அழைத்து பேசியுள்ளார். அவர்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், அவர்கள் விருப்பத்திற்கு அவர்களை விட்டுவிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின்பே இருவரும் பரஸ்பரம் தங்கள் முடிவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண