மக்களவை பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் தொடங்கி லெட்டேர் பேட் கட்சிகள் வரை அனைத்தும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இந்த தேர்தலில் பலமான கூட்டணிகளாக கருதப்படுவது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A கூட்டணி.
I.N.D.I.A கூட்டணியை தமிழ்நாட்டில் தலைமை தாங்கவுள்ள கட்சி என்றால் அது ஆளும் திமுக. பாஜகவின் கூட்டணி இன்னும் முழுமையாக உறுதியாகாததால், பாஜகவின் கூட்டணியை தமிழ்நாட்டில் யார் தலைமை தாங்கவுள்ளார்கள் என்பது தெரியவில்லை. பாஜக தனது தலைமையை ஏற்றுக் கொள்பவர்கள் பாஜக கூட்டணியில் சேரலாம் என தெரிவித்துள்ளதால், பல்வேறு கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியில் சேர உள்ளதாக கூறப்படுகின்றது.
அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டாலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாங்கள் பாஜகவுடனான கூட்டணியில் இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் 15 முதல் 18 தொகுதிகள் வரை கேட்டதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் த.மா.கா போன்ற கட்சியும், தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இப்படியான நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான நடிகர் சரத் குமார், பாஜக கூட்டணியில் இணையவுள்ளார் என்றும், ஒரு தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவர் இதற்கு முன்னர் கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய சரத்குமார் அதிமுகவில் சேர்ந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் மனைவி ராதிகாவுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அதிமுகவில் இருந்து ராதிகா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ராதிகா நீக்கப்பட்ட பின்னர் சில காலம் அதிமுகவில் இருந்த நடிகர் சரத்குமார், அதிமுகவில் இருந்து விலகி 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு தென்காசி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.