தலைநகர் சென்னையில் இலவச பேருந்துகளுக்கு இனி ”பிங்க்” நிற முகப்புகளாக மாற்றப்படும் என பெருநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பெண்களின் சிரமத்தைக் குறைக்க அரசு புது முடிவு செய்துள்ளது.
தலைநகர் சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக பெருநகர போக்குவரத்து கழக (MTC) பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2021ல் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தங்களின் தேர்தல் பரப்புரை வாக்குறுதிகளில் ஒன்றினை நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம் பல பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் அரசு பேருந்துகளில் பயணித்து பயன் பெறும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மளமளவென உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு 40 சதவீதமாக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது . இதுதொடர்பாக பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கடந்த ஓராண்டில் 132 கோடிக்கும் அதிகமான பெண்கள் திமுக அரசின் இலவச பயணத் திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தும் வகையில் 1,600 கோடி ரூபாய் அளவிற்கு மானியமாக தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த இலவச பயணத் திட்டத்தால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மாதந்தோறும் குறைந்தது ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க உதவிகரமாக இருக்கிறது. இந்த சேமிப்பு தொகை அவர்களின் குடும்ப செலவுகளும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்