திமுகவில் உள்ள 32 அணிகளில் காவல்துறையும் ஒரு அணியாக சேர்த்துக் கொள்ளலாம் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். காவல் கண்காணிப்பாளரை சந்தித்து விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
சமீபத்தில் கரூரில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்திற்காக பிளக்ஸ் பேனர்கள் வைக்கவும், கொடி நடுவதற்கும் கட்சி நிர்வாகிகள் சார்பாக காவல் நிலையத்தில் அனுமதி கேட்டதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். செயல்வீரர்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் வைக்கப்பட்ட ஒரு சில பிளக்ஸ் பேனர்களும் காவல்துறையினர் மூலமாக அகற்றப்பட்டது. அதேபோல் கட்சி கொடி நடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
கரூரில் தொடர்ந்து அதிமுக சார்பாக நடைபெறும் எந்தக் கூட்டத்திற்கும் கொடி நடுவதற்கும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால், திமுக சார்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு மட்டும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கும், கொடி நடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதில்லை. காவல்துறையினரின் இந்த செயல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கும் இதுகுறித்து தெரியாது என்று கூறுகின்றனர்.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கே தெரியாமல் காவல்துறையில் இருப்பவர்கள் இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. திமுகவில் 32 அணிகள் இருக்கிறது. அதில் காவல்துறையும் ஒரு அணியாக சேர்த்துவிடலாம் என்று சரமாரியாக குற்றச்சாட்டு விடுத்தார்.