திருப்பூரில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இந்திய நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைப்பதாக உணர்ச்சிப்பபெருக்குடன் தெரிவித்தார்.
இந்தியாவைப் பாதுகாக்கும் பொறுப்பு
மாநாட்டின் மேடையில் முதலமைச்சருக்கு அரசமைப்புச் சட்டப் புத்தகத்தைப் பரிசாக வழங்கிய பின் பேசிய கனிமொழி, "மகளிராகிய நாங்கள் இந்த நாட்டை உங்களிடம் ஒப்படைக்கிறோம். நாட்டின் எதிர்காலத்தை உங்களிடம் ஒப்படைக்கிறோம். இந்த புத்தகமானது நாட்டை பாதுகாக்கும் அடையாளமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்த இந்தியத் திருநாட்டையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு முதலமைச்சருக்கு உள்ளது அண்ணா" எனத் தெரிவித்தார்.
மகளிருக்கான ஆட்சி:
திமுக அரசு மகளிருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விமர்சிப்பவர்களுக்கு புள்ளிவிவரங்கள் மூலம் அவர் பதிலடி கொடுத்தார்."தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா எனக் கேட்பவர்களுக்கு, தமிழகத்தில் பயன்பெறும் 1.31 கோடி பெண்களே பதில் சொல்வார்கள், தமிழகத்தில் பெண்கள் உயர்கல்விக்குச் செல்லும் விகிதம் 48% ஆக உள்ளது. இது வளர்ந்த நாடுகளுக்கு இணையான ஒரு சாதனை. பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால்தான், இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் திகழ்கிறது."
எதிர்க்கட்சிகளுக்குச் சாட்டையடி
பாஜக மற்றும் அதிமுக ஆட்சிக்காலங்களில் பெண்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டி அவர் கடுமையாக விமர்சித்தார். எதிரே இருக்கும் சங்கிக் கூட்டம் திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தன. குறிப்பாக, பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. போராட்டத்திற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் தான் அந்த பெண்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
100 நாள் வேலை திட்டத்தை மாற்றியதை எதிர்த்து குரல் கொடுத்தது திமுகதான். பாசிசத்துக்கு எதிராக முதலில் குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைவருக்குமான ஆட்சியை ஸ்டாலின் நடத்திவருகிறார். அவர் மக்களையும் சமூக நீதியையும் காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் என்று பேசியிருந்தார்
பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு எதிர்ப்பு
மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த கனிமொழி, "கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பாஜக ஆட்சி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மதக் கலவரத்தையும், வெறுப்பையும் உருவாக்கி அரசியல் செய்யும் பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் தலைவராக முதலமைச்சர் திகழ்கிறார்" என்று புகழாரம் சூட்டினார்.