தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுமே ஆன்மீகத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். அந்த வகையில் மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். வைணவ சமயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகவும் இந்த மார்கழி மாதம் உள்ளது.
வைகுண்ட ஏகாதசி - Vaikunta Ekadasi 2025
இந்த மார்கழி மாதத்திலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பது வைகுண்ட ஏகாதசி ஆகும். வைகுண்ட ஏகாதசி பிறக்கும் நாளின் முந்தைய இரவு முழுவதும் விழித்திருந்து வைகுண்ட ஏகாதசி பிறக்கும் அந்த அதிகாலையில் சொர்க்கவாசலை தரிசனம் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும். இதனால், வைகுண்ட ஏகாதசி 30ம் தேதி பிறக்க உள்ள நிலையில், 29ம் தேதி இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து தரிசனம் செய்வார்கள்.
திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயில் - Arulmigu Sri Parthasarathyswamy Temple
சென்னையில் இருக்கும் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது.
நாளை அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறுகிறது . அதனை தொடர்ந்து காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. காலை 5.30 மணியிலிருந்து அன்றிரவு 10.30 மணி வரை மூலவரை பொது தரிசனம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவடிசூலம் ஸ்ரீவாரு வெங்கடேச பெருமாள் கோயில் - Arulmigu Sri Vaaru Venkatesa Perumal Temple
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் ஸ்ரீ வாருவெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். திருவடி சூலத்தில் ஏழுமலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள 108 திவ்ய தேசங்களில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சன்னதியில் சொர்க்க வாசல் திறப்பு விமர்சியாக நடைபெறும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில், பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படும். சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருப்பதால், வாய்ப்பிருப்பவர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேரில் காணலாம்.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் - Divyadesam Sri Ashtabujakara Perumal Temple
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில், காஞ்சியில் பிரசித்தி பெற்ற 44-வது திவ்ய தேசமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் ரங்கசாமி குளம் அருகே அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் கோயிலாக இந்த கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற, இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.
காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோவில் - (Vaikunta Perumal Temple)
காஞ்சிபுரம் வைகுண்ட ராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. இங்கு முதல் மாடியில் தனியாக பரமப்பத வாசல் என உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த வாசல் திறக்கப்படும். எனவே பிற கோயில்களை காட்டிலும் இந்தக் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கோயில் புனரமைப்பு நடைபெறுவதால், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பெருமாள் கோயில் Sri Pataladhri Narasimhar Thirukovil (Pataladhripuram)
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் எழுந்தருளி, அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெறும். சென்னை புறநகர் பகுதியில் இருப்பவர்கள் எளிதில் சென்று வரக்கூடிய கோயிலாக இந்த கோயில் உள்ளது.
வீட்டிலிருந்து வழிபடலாம்
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வயதானவர்கள் உடல்நிலை கருத்தில் கொண்டு கோயிலுக்கு நேராக செல்ல முடியவில்லை என்றாலும், வீட்டில் இருந்தபடியே மனம் உருகி பெருமாளை வணங்கினால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.