பொதுவாக மழை காலத்தில் அதிகளவு பாதிப்பும், நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். குழந்தைகள், முதியவர்கள் பலரும் இதனால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தமிழ்நாட்டில்  கடந்த சில நாட்களாக பலருக்கும் காய்ச்சல் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகளவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

11 ஆயிரத்து 743 பேருக்கு டெங்கு:


“ கடந்தாண்டைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு மிகப்பெரிய அளவு இருந்தது. எப்படி 2012ம் ஆண்டில் 66 இறப்புகளும், 2017ம் ஆண்டில் 65 இறப்புகளும் என்கிற நிலை அச்சம் ஏற்பட்டதோ, 2023ம் ஆண்டும் நிகழ இருக்கிறது என்ற நிலை இருந்தது. ஆனால், இதுபோன்ற கூட்டம் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு நடத்தி அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நிகழ்த்திய இன்றைக்கு இறப்புகளும் குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பு நமது கட்டுப்பாட்டில் உள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை 11 ஆயிரத்து 743 பேருக்கு டெங்கு பாதிப்பு உருவாகியுள்ளது. இதில் இறப்புகள் 4 என்று பதிவாகியுள்ளது. இறப்பை பொறுத்தவரையில் டெங்கு வந்தவுடன் இறந்துவிடுவதில்லை.  நோய் பாதிப்பு வந்தவுடன் உடனடியாக சிகிச்சை பெறாமல் வீடுகளிலே சிகிச்சை பெற்று நோய் பாதிப்பு அதிகரித்த பின் மருத்துவர்களைத் தேடுவது, மருத்துவமனைக்கு வருவதும் ஒரு காரணம்.

4 பேர் உயிரிழப்பு:


நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் டெங்கு வரும்போது உடனடியாக மருத்துவரகளை அணுக வேண்டும். டெங்கு மட்டுமின்றி எந்த பாதிப்பாக இருந்தாலும் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும். தொடர் விழிப்புணர்வுகள் காரணமாக 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.


நேற்று 205 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்புகள், நோய் பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கான வீரியம் இவையெல்லாம் பரிசோதிக்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்பு குறித்து 104 எண் உதவி எண்ணாகும். அங்கு அலுவலர்கள் தயாராக உள்ளனர்.


சென்னை, மதுரையில் அதிகம்:


57.6 சதவீதம் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இவ்வாறு பதிவாகியள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் கொள்கை. நீட் தேர்வுக்கு எதிராக எழுந்த போர்க்குரல் இன்று இந்தியா முழுவதும் ஒலிக்கிறது. நெக்ஸ் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுக்கப்படுகிறது.”


இவ்வாறு அவர் பேசினார்.