முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் உட்பட இருவர் பணமோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் "ஹனிபா என்ற தரகர், ஓட்டுநர் விஜய் ஆகிய இருவர் மூலம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த ரவி என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
அவர் என்னிடம் அரசு வேலை வாங்கி தர ரூ.11 லட்சம் செலவாகும் எனவும், தனக்கு பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களையும் தெரியும் எனவும் கூறினார். நானும் அதனை நம்பி, பணம் கொடுத்தேன். ஆனால் சொன்னபடி செய்யாமல் பணத்தை வாங்கிக் கொண்டு அலைக்கழித்தார். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி தருமாறு ஹனிபா, ரவியிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை மிரட்டினார்கள்" என முத்துலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்த புகாரானது சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் முத்துலட்சுமி பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ரவி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது உறுதியானது.
இதனையடுத்து போலீசார் ரவி மற்றும் விஜய் இருவரை கைது சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்த போது அவருக்கு உதவியாளராக ரவி இருந்துள்ளார். அவர் இதுவரை எத்தனை பேரிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.