பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற நிகழ்ச்சியானது நேற்று குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இதில், நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் நேருவுக்கு அடுத்தப்படியான தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 



மோடி அமைச்சரவையில் மொத்தமாக 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இம்முறை 7 பெண் அமைச்சர் இடம் பெற்றுள்ளனர். இதில் நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா தேவி, அனுப்ரியா படேல், ஷோபா கரந்த்லாஜே, ரக்ஷா காட்சே, சாவித்ரி தாக்கூர் மற்றும் நீமுபென் பாம்பானியா ஆகியோர் அடங்குவர்.   இந்தநிலையில், பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 7 பெண் அமைச்சர்களின் அரசியல் பயணத்தை இங்கே பார்க்கலாம்.. 


நிர்மலா சீதாராமன்: 


கடந்த 2019ம் ஆண்டு மே 31ம் தேதி நிர்மலா சீதாராமன், இந்தியாவின் 28வது நிதி அமைச்சராக பதவியேற்றார். மேலும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இரண்டாவது பெண் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த சீதாராமன், 2010ல் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2014ம் ஆண்டில், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து இணை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இந்தாண்டும் நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அன்னபூர்ணா தேவி: 


ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து மோடி அமைச்சரவையில் அன்னபூர்ணா தேவி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் கோடெர்மா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது, மோடி அமைச்சரவையில் மாநில கல்வி அமைச்சராக இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இம்முறையும் அன்னபூர்ணா தேவி மீது நம்பிக்கை வைத்து இரண்டாவது முறையாக அமைச்சர் பதவி வழங்கியுள்ளது பாஜக. அன்னபூர்ணா தேவியின் முழுப் பெயர் அன்னபூர்ணா தேவி யாதவ். இவரும் பாஜகவின் தேசிய துணைத் தலைவர்களில் ஒருவர். இதற்கு அன்னபூர்ணா தேவி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்தார். 


அனுப்ரியா படேல்: 


அனுப்ரியா படேல் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பிறந்தவர். இவர், உத்தரபிரதேச அரசியலில் இளம் பெண் முகமாக பார்க்கப்படுகிறார். அனுப்ரியா படேல் தனது தந்தை சோனேலாலின் கட்சியான அப்னா தல் (எஸ்) கட்சியை வழிநடத்தி வருகிறார். அப்னா தளம் கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அப்னா தளம் (எஸ்) அனுப்ரியா படேல் மற்றும் அப்னா தளம் (கிருஷ்ணா படேல் பிரிவு) அவரது தாயார் வழிநடத்தி வருகிறார். 


ஷோபா கரந்த்லாஜே: 


மூன்றாவது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட  ஷோபா கரந்த்லாஜே, மீண்டும் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஷோபா, விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் இணை அமைச்சராக இருந்தார். 57 வயதான ஷோபா சமூகப்பணியில் பட்டப்படிப்பும், சமூகவியலில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்லார். பாஜகவில் ஷோபா கரந்த்லாஜே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரக்ஷா காட்சே:


37 வயதான ரக்ஷா காட்சே, மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் காட்சேவின் மருமகள் ஆவார். ரக்ஷா காட்சே தனது 26வது வயதில் முதல் முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரக்ஷாவின் கணவர் நிகில் காட்சே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 


சாவித்ரி தாக்கூர்: 


தார் மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பழங்குடியினத் தலைவரான சாவித்ரி தாக்கூர், மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.  46 வயதான சாவித்ரி தாக்கூர் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் பழங்குடி முகமாக உள்ளார். 2004 முதல் 2009 வரை மாவட்ட ஊராட்சியாக இருந்துள்ளார். 2014ல் முதல் முறையாக எம்.பி.யான இவர், தற்போது 2024ல் மீண்டும் பாஜக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


 நிமுபென் பாம்பானியா: 


 நிமுபென் பாம்பானியா குஜராத் மாநிலம் பாவ்நகர் எம்.பி.யா தேர்ந்தெடுக்கப்ப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக, மேயராக இருந்தார். பாவ்நகர் எம்.பி.யாக இருந்த பாரத்பென் ஷயாலுக்கு பதிலாக நிறுத்தப்பட்டு, நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 


இருப்பினும், அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட 7 பெண் அமைச்சர்களின் போர்ட்ஃபோலியோ என்ன என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.