வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உட்பட 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்திருந்தது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த சில தினங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்து பதிவாகியிருந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், நாளை (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் (ஏப்.9,10) இப்பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்