நடப்பு ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், மக்கள் நீதி மையம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “குடியரசு தின அணிவகுப்பு ஊர்திக்கு வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதி போன்ற விடுதலை வீரர்களின் உருவங்களுக்கு பதில் வேறு எவரின் உருவங்களை வைக்கப்போகிறீர்கள்? கோட்சேவின் உருவத்தையா? கோல்வார்க்கரையா? சாவர்க்கரையா?” என கேள்வி எழுப்பியுள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “குடியரசு தின அணிவகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற விடுதலை வேள்விக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களின் உருவங்களைத் தாங்கிய ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இவர்களை சர்வதேச அளவில் யாருக்கும் தெரியாது என அதிகாரிகள் பதிலளித்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. இவர்களைத் தெரியாது என்றால் வேறு எவரின் உருவங்களை வைக்கப்போகிறார்கள்? காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் உருவத்தையா? அல்லது கோல்வார்க்கரையா? சாவர்க்கரையா?  


இதெல்லாம் நிபுணர் குழுவின் முடிவு என்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள். யார் அந்த ‘நிபுணர்கள்’? அவர்களது பெயர்களும் தகுதிகளும் வெளியிடப்பட வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் பிறந்த நாளுக்கும், மகாகவி பாரதியின் நினைவு நாளுக்கும் பாரதப் பிரதமர் ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தி இருந்தாரே, அது ‘நிபுணர்’ குழுவிற்குத் தெரியாமல் போயிற்றா?






பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் ஊர்திகள் மறுக்கப்பட்டுள்ளன. சமூகப் புரட்சியை நிகழ்த்திய நாராயணகுருவின் உருவத்திற்குப் பதிலாக ஆதி சங்கரரின் உருவத்தை வைக்கச் சொல்லி கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்கிறார்கள்.
பள்ளிப் பாடப்புத்தகத்தில், கல்லூரிகளில், அரசுத் தேர்வுகளில், மத்திய அரசு  அலுவலகங்களில் என எங்கும் எதிலும் ஹிந்துத்துவாவைப் புகுத்த முயற்சித்துக்கொண்டே இருக்கும் பாஜக அரசு இப்போது தேசத்தின் குடியரசு தினத்திலும் தனது கைங்கர்யத்தைக் காட்டுகிறது? எதில்தான் அரசியல் செய்வது என்பதில் ஒரு வரைமுறை இல்லையா?


தமிழக விடுதலை வீரர்களை அவமதித்த மத்திய அரசின் போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் மாநில சுயாட்சிக்கும் நேர்ந்த இந்த அவமதிப்பு குறித்து, தமிழக முதல்வரானவர் கண்டனங்களைத் தெரிவிக்காமல், பிரதமருக்கு கோரிக்கைக் கடிதம் மட்டும் அனுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. 


வரும் குடியரசு தினத்தில் அனைத்து மாநிலங்களின் ஊர்திகளும் அந்தந்த மாநில மக்களால் தேர்ந்தெடுத்த அரசு சித்தரிக்கும் அலங்காரங்களுடன் அணிவகுப்பு நிகழ்வதே சரியான நியாயமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியும். மக்களாட்சியின் மகத்துவங்களை ஒன்றொன்றாகப் பலியிடும் பாஜக அரசு திருந்திக்கொள்ளவில்லையெனில் அதன் விளைவுகளை எதிர்வரும்  5 மாநில தேர்தல்களில் நிச்சயம் எதிர்கொள்ளும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெறும். இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.


அதனை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பதில் கடிதம் எழுதியுள்ளார்.  அதில், “முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு ஊர்திகள் பரிசீலிக்கப்பட்டது. அடுத்தடுத்த சுற்றுகளில் உள்ள விதிகளின்படி தமிழ்நாடு ஊர்திகளை இந்த முறை ஏற்கமுடியவில்லை. கடந்த 2017, 19, 20,21 ஆம் ஆண்டுகளில் தமிழக ஊர்திகள் குடியரசுத் தின விழாவில் இடம்பெற்றதை நினைவூட்ட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது