திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு தங்க மோதிரம் அணிவித்தார்.
திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணி செயலாளாருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால், திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர்வளத்துறை அமைச்சர் கே.என். நேரு தங்க மோதிரம் அணிவித்தார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவருடன் இருந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் கட்சி மற்றும் ஆட்சியின் நலனுக்காக மிகவும் உழைக்கிறார். குறிப்பாக இளைஞர் அணி சார்பில் மிகவும் சுழன்று சுழன்று உழைக்கிறார். அவரது பணி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கழகத் தோழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவரது பிறந்த தினத்தில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது புகழ் நிலைக்க வாழ்த்துகிறேன்” எனக் கூறினார்.
உதயநிதி அமைச்சராவாரா?
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரை, அமைச்சராக வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார், இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள், உதயநிதி அமைச்சராவது எப்போது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “அதெல்லாம் தலைவர் பார்த்து முடிவு செய்வார், முதலமைச்சர் பார்த்து முடிவு செய்வார். நாங்கள் யார்?” என பதில் அளித்தார்.
இதற்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். மேலும், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தும் வாழ்த்து பெற்றார். அப்போது அவரது தாயார் துர்கா ஸ்டாலின் அவருடன் இருந்தார்.