சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது கே.வி.குப்பம் தொகுதியில் பெண்கள் கல்லூரி அமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி எழுப்பிய கேள்வியும், உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின் பதிலும், அமைச்சர் துரைமுருகனின் கமாண்டும் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பூவை ஜெகன் மூர்த்தி, கே.வி.குப்பம் எம்.எல்.ஏ: கடந்த கூட்டத்தொடரில் கூட கே.வி.குப்பம் தொகுதிக்கு பெண்கள் கலைக்கல்லூரி கேட்டிருந்தேன். அங்கிருக்கும் கல்லூரிகள் இருபாலர் கல்லூரிகளாக உள்ளது. போக்குவரத்து வசதி கூட இல்லாமல் கிராமங்களில் இருந்து வரும் மாணவிகளை இந்த இருபாலர் கல்லூரிக்கு அனுப்பாமல் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, வீட்டிலேயே இருக்கட்டும் என்ற சூழல் உள்ளது. இதனால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே பெண்களுக்கு என்று தனியாக கல்லூரியை கே.வி.குப்பம் தொகுதியில் உருவாக்கி தர வேண்டும். அமைச்சர் கேட்பதற்கு உண்டான இடங்களும் அங்கே உள்ளதால் அமைச்சர் தனது பதிலை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பொன்முடி, உயர்க்கல்வித்துறை அமைச்சர்: கே.வி.குப்பம் தொகுதி குடியாத்தத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கே ஒரு இருபாலர் கல்லூரியும், காட்பாடியிலும் கல்லூரி உள்ளது. கே.வி.குப்பத்திலும் கல்லூரி உள்ளது. குடியாத்தம் கல்லூரியில் நான் பணியாற்றினேன். கோ எஜிகேஷன் என்பது பிரமாதமாக உள்ளது. அதுல ஒன்னும் தப்பில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தால் கோ எஜிகேஷன் கூடாது பெண்களுக்கு தனிக்கல்லூரி வேண்டும் என்கிறீர்கள். இப்போதெல்லாம் பெண்கள் கோ எஜிகேஷன் என்றெல்லாம் பார்ப்பதில்லை, எந்த கல்லூரியாக இருந்தாலும் சென்று படிக்கிறார்கள். எனவே அங்கே தனியாக பெண்கள் கல்லூரி அமைக்கும் அவசியம் ஏற்படவில்லை.
பூவை ஜெகன் மூர்த்தி, கே.வி.குப்பம் எம்.எல்.ஏ: மாண்புமிகு உயர்க்கல்வித்துறை அமைச்சர் சொல்லும் விளக்கம் உண்மையாக தொகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. பெண்கள் கல்லூரி வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார்கள். எப்படியாவது அமைச்சரிடம் பேசி பெண்கள் கல்லூரியை கொண்டுவர வேண்டும் என கூறி இருக்கிறார்கள். கண்டிப்பாக பெண்கள் கல்லூரியை அமைச்சர் அவர்கள் உருவாக்கித் தர வேண்டும்.
பொன்முடி, உயர்க்கல்வித்துறை அமைச்சர்: உங்கள் தொகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் 1678 பேர் பயில வேண்டிய நிலையில் 1570 பேர்தான் சேர்ந்துள்ளார்கள். அரசுக்கல்லூரிகளே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கல்லூரிகள் தர வேண்டும் என முதலமைச்சர் சொல்லி உள்ளார். பெண்கள் கல்லூரி வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையில் தவறு கிடையாது. ஒரு கல்லூரி தொடங்க 20 கோடி ரூபாய் செலவாகிறது, நிதிநிலைமைக்கு ஏற்ப உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அரசு மேற்கொள்ளும்.
துரைமுருகன், அவை முன்னவர்: இல்லை என்பதை அழகாக சொன்ன ஒரே மந்திரி இவர்தான் (பேரவையில் சிரிப்பலை)
பொன்முடி, உயர்க்கல்வித்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே...! என்னிடம் இந்த பதிலை சொல்ல சொன்னவரே மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்தான் (துரைமுருகன்). அவர் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர். சிறப்பாக பதில் சொல்லி உள்ளதாக வாழ்த்தி உள்ளார். அவருக்கு நன்றி.