தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, முதன்முறையாக இன்று திருச்சி கல்லணையை ஆய்வு செய்தார். நாளை (ஜூன் 12) சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் - ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகளில் பங்கேற்று அதன்பின் மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உள்ளார்.
முன்னதாக, இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ஜூன் 11ம் தேதி (இன்று) திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். நான் மேற்கொள்ளவிருப்பவை முழுக்க முழுக்க அரசுப் பணிகள் சார்ந்தவை என்பதால் அந்தந்த மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் - கிளைக்கழக நிர்வாகிகள் - செயல்வீரர்கள் உள்ளிட்ட கட்சியினர் என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். கொரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்யும் நாள்தான் மகிழ்ச்சியான நாளாக வெற்றிகரமான நாளாக அமையும்" என்று தெரிவித்தார்.
விவசாயிகளின் பங்களிப்புடன் (participatory Irrigation Management) வெள்ள பாதிப்பினை தணிப்பதற்காகவும், நிலத்தடி நீரின் ஆதாரத்தை பெருக்கி வறட்சியினை குறைப்பதற்காகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளை,மராமத்து செய்யும் பணிக்காக, குமராமத்து சிறப்பு திட்டத்த்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கால்வாயில் வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள் முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளை பலப்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கருர் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டது. கூட்டத்துக்குப் பிறகு கருத்து தெரிவித்தார் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், " உலகிலேயே மிகச்சிறந்த நீர்பாசன முறை காவிரி டெல்டா பகுதியில் மட்டுமே உள்ளது. இதை பராமரிப்பு செய்ய காலியாக உள்ள பொறியாளர்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கடைமடை வரை எல்லா பகுதிகளும் தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் சிறப்பாக தூர்வாரும் பணிகள் மேற்க்கொள்ளப்படும். இப்பணிகளை நானும், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளரும், சிறப்பு அதிகாரிகளும், துறை உயர் அலுவலர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நேரில் வந்து ஆய்வு செய்து கண்காணிப்போம்" என்று தெரிவித்தார்.