சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த பிப்ரவரி மாதம் இறுதியிலிருந்து இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளுக்கு 14 மாதங்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாத காரணத்தினால் மாணவர்களின் தேர்வுகள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 



பள்ளி சென்று மாணவர்கள் படிப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் எனக் கருதி அரசு சார்பில் விடுமுறைகள் அளிக்கப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் மாணவர்கள் படிப்பை மறந்து விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி, மூலமாகவும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் பாடம் எடுக்கப் படுகிறது அதே போல தனியார் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் எடுத்து வருகிறது. என்னதான் மாணவர்கள் விடுமுறையை விரும்புபவராக இருந்தாலும் தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள் பள்ளி சென்று தங்களுடைய நண்பர்களுடன் பழக முடியாமலும் ஓடியாடி விளையாட முடியாமலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே தங்கி இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தை சேர்ந்த மதியழகன்-லக்ஷ்மி   தம்பதியின்இளைய மகன் நித்தின் ராஜ் இவருக்கு வயது 6. மகாபலிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டார். இன்னாளில் கொரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் ஓராண்டிற்கும் மேலாக செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

 



இந்நிலையில் தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் தன்னை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்றும் தன்னுடைய பெற்றோர்களிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். பெற்றோர்களும் தன்னுடைய மகனிடம் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை பள்ளிகள் திறந்தால் அனுப்பலாம் என சமாதானம் செய்து வந்துள்ளனர். இருந்தும் நித்தின் ராஜ் தொடர்ந்து பெற்றோர்களை வற்புறுத்தி வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பெற்றோர்களை நம்பினால் பயன் இல்லை எனவே நாமே பள்ளிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, தன்னுடைய சகோதரனின் சீருடைகளை அணிந்து கொண்டு வீட்டிலிருந்த புத்தகப்பை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று, வாசலில் நித்தின் ராஜ் நின்று கொண்டே இருந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் நித்தின் ராஜிடம் விசாரித்தபோது பள்ளிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். கதவை திறக்க கூறுங்கள் நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.  இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் நித்தின் ராஜ் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த பெற்றோர் நித்தின் ராஜை சமரசம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

பள்ளி விடுமுறை நாட்களுக்காக ஏங்கியது 90 கிட்ஸ்கள் காலம் , பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறினால் 2k கிட்ஸ்கள் காலம்  போலும்.