டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகத் தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன் மொழிந்தார். பின்னர் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் டங்ஸ்டன் சுரங்கத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், சுரங்க அனுமதியை திரும்பெற வேண்டும், இனிவரும் காலங்களில் மாநில அரசின் அனுமதியின்றி ஏந்த திட்டங்களுக்கும் ஒப்புதல் கொடுக்கக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “2023ஆம் ஆண்டு சுரங்கம் ஏலம் தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு போதிய எதிர்ப்பை மாநில அரசு தெரிவிக்கவில்லை. தமிழக எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. அமைச்சர் துரைமுருகன் எழுதிய கடிதம் வெளியாகவில்லை. 10 மாதங்களாக திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த துரைமுருகன், “இந்த சட்டதிருத்தம் சுயமரியாதைக்கு சவால் விடும் செயல். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் கடிதம் எழுதப்பட்டிருந்தது” என குறிப்பிட்டார்.
தொடந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பெரும்பான்மை இல்லாததால் சட்டதிருத்தம் நிறைவேறியது. மத்திய அரசு ஏலம் விட்டிருந்தாலும் இந்த திட்டம் நான் முதலமைச்சராக இருக்கும்வரை செயல்படுத்த விடமாட்டேன். அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார்.