மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்ட முன்வடிவு குறித்து குஜராத் முதல்வர் விஜய்ரூபானி, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒரிசா மாநில முதல்வர் நவீன்பட்னாயக், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட கடலோர மாநிலங்களை சேர்ந்த 9 முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சிறுதுறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் துறைமுகம். கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வரவுள்ள இந்திய துறைமுக மசோதா 2021 என்ற புதிய சட்டமுன்வடிவு மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமுன்வடிவு குறித்து விவாதிப்பதற்காக கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் வரும் ஜூன் 24ஆம் தேதி மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய துறைமுக சட்டம் 1908- இல் சிறுதுறைமுகங்களை திட்டமிடுதல், உருவாக்குதல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் தொடர்பான அதிகரங்கள் மாநில அரசுகளிடமே உள்ளது என மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதியதாக கொண்டு வரப்பட உள்ள இந்திய துறைமுக சட்டம் 2021 மசோதாவில் மாநில அரசின் அதிகாரங்களை ஆலோசனை வழங்கும் அமைப்பாக இருக்கும் கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்ல வழிவகுப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின்.
சிறுதுறைமுகங்களை பொறுத்தவரை தற்போதைய அமைப்பு முறை வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக குறிப்பிட்டுள்ளார் மேலும் புதிய கடல்சார் சட்டவரைவு 2021 நிறைவேற்றப்பட்டால் நீண்டகாலத்திற்கான பாதகங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின். இச்சட்டம் நிறைவேறினால் துறைமுகங்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு பெரிய பங்குகள் இருக்காது என்றும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார், அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இந்திய துறைமுக சட்ட முன்வரைவு 2021-க்கு எதிராக இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ள கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலில் புதிய சட்டமசோதாவை எதிர்த்து ஒத்த கருத்துக்களுடன் மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்