ஈரோடு கிழக்கு இடைத்தேர்லில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது, அவர் கூறியதாவது, "நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் உள்ளேன். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. யார் வெற்றி பெற்று பிரதமராக வரவேண்டும் என்று எண்ணுவதைவிட யார் பிரதமராக இருக்கக் கூடாது, யார் ஆட்சி நடைபெறக் கூடாது என்பதை மட்டுமே இப்போதைக்கு திமுகவின் கொள்கையாக இருக்கிறது” என தெரிவித்தார். 


”எடப்பாடிக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள்”


மேலும், ”ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நின்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு மிகப்பெரிய மகத்தான வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையில் ஒரு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்து இருக்க கூடிய அந்த தொகுதியின் வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 20 மாத திமுக ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த வெற்றி” என்றார்.
 
"இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கூறியதைப் போல திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்கின்ற வேண்டுகோளை தொடர்ந்து விடுத்தேன். திராவிட மாடல் ஆட்சி இன்னமும் பெருமளவில் நடைபெற வேண்டும் என்கின்ற நோக்கில் மக்கள் இந்த மகத்தான வெற்றியை அளித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரையில் தன்னையே மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல் பேசிய பேச்சுக்கு மக்கள் ஈரோடு இடைத்தேர்தல் மூலமாக ஒரு நல்ல பாடத்தை வழங்கி உள்ளார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


”தேசிய அரசியலில் தான் உள்ளேன்"


இதனை தொடர்ந்து பேசிய அவர், "நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் உள்ளேன், அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. யார் வெற்றி பெற்று பிரதமராக வரவேண்டும் என்று எண்ணுவதைவிட யார் பிரதமராக இருக்கக் கூடாது, யார் ஆட்சி நடைபெறக் கூடாது என்பது மட்டுமே இப்போதைக்கு கொள்கையாகக் கொண்டுள்ளோம்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.


முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், மு.க. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக வர முடியுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ ஏன் முடியாது? அவரால் ஏன் பிரதமர் ஆக முடியாது? அதில் என்ன தவறு என கேள்வி  எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.