தமிழ்நாட்டின் உரிமைக்காக டெல்லி சென்றதாகவும், யார் காலிலும் விழுவதற்காக டெல்லி செல்லவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.


டெல்லியில் இருந்து நேற்று சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதன்பின்னர், திருமண விழாவில் பேசிய முதலமைச்சர்,  “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சீர்த்திருத்தத் திருமணங்கள் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ் கூறியதுபோன்று யார் காலிலும் விழுவதற்காக டெல்லி செல்லவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகவே சென்றேன். தமிழ்நாடு உரிமைகளுக்காகத்தான் டெல்லி சென்று பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்தேன். ஏனெனில், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல; முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். கலைஞர் கருணாநிதி வழியில் நின்றி அனைத்தையும், அனைவரின் ஒத்துழைப்புடன் சாதிப்போம். நான் துபாய்க்கு பல கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளார். இபிஎஸ்ஸுக்கு நமது கூட்டணி கட்சி தலைவர்கள் பதிலளித்துவிட்டதால் மேலும் பேசத் தேவையில்லை” என்றும் பேசினார்.


முன்னதாக,  “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா போல் இருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய தொழில்  தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு சென்றதை அப்போது மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண