தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த 6-ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை கடந்தாண்டு இறுதி முதலே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தி.மு.க. தங்களது தேர்தல் பரப்புரைகளை, சட்டசபை தேர்தலுக்கான பணிகளை கடந்தாண்டு கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த உடனே தொடங்கிவிட்டது.
தமிழகத்திற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில்தான் அறிவித்தது. இதனால், தேர்தல் பரப்புரைக்கு அரசியல் கட்சியினருக்கு ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருந்தது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட, ம,தி.மு.க. வி.சி.க. என முக்கிய கட்சிகள் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. இதனால், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, அரசியல் பரப்புரை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தார்.
வாக்குப்பதிவிற்கு முந்தைய பத்து நாட்களில், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி மட்டுமின்றி தென் தமிழகம், வட தமிழகம் என தி.மு.க. வேட்பாளர்களுக்காகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக இடைவிடாது தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். இதற்காக தனி விமானத்தையே அவர் வாடகைக்கு எடுத்து இருந்தார். அவரது மகனும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியிலும், தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் பிற தொகுதிகளிலும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்பட குடும்பத்தாருடன் கடந்த வெள்ளிக்கிழமை கொடைக்கானலுக்கு சென்றார். தற்போது கொடைக்கானலில் ஓய்வுஎடுத்து வரும் மு.க.ஸ்டாலின், இன்று கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராமமான மன்னவனூருக்கு சென்றார்.
அங்குள்ள மத்திய அரசின் ஆட்டுப்பண்ணைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அந்த பண்ணையில் உள்ள செம்மறி ஆடுகள், முயல்கள் ஆகியவற்றை ஆர்வமாக பார்வையிட்டார். மேலும், அங்கு வளரும் முயல்களை தனது கைகளில் தூக்கி கொஞ்சி சிறிது நேரம் விளையாடினார். இதையடுத்து, பண்ணையில் உள்ள ஆய்வாளர்கள், பணியாளர்கள் என அனைவருடனும் சிறிது நேரம் கலந்துரையாடினார். இதையடுத்து, தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து அங்குள்ள பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மன்னவனூர் பகுதிக்கு அருகில் உள்ள கூக்கால் பகுதியிலும் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஆர்வமாக சுற்றிப்பார்த்தார்