சென்னை சங்கமம்:


சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில்,  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 600 கலைஞர்கள், நம்ம ஊரு திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.


அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்பு:


நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முதலமைச்சரின் மனைவி துர்கா மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வந்து சங்கமித்துள்ள கலைஞர்கள், நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.


முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:


கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்த பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”திருவிழாவில் பொதுமக்கள் மனநிறைவோடு இருப்பது போன்று தான், சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியிலும் அனைவரும் பங்கேற்று மகிழ்ச்சியாக உள்ளனர். தொடர்ந்து, சட்டமன்றம், அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருந்தாலும், இந்த கலை நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் எனும் ஆவலுடன் இங்கு வந்தேன். இங்கு  நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளால் கடந்த ஒரு மணி நேரம் எப்படி போனது என்பதே எனக்கு தெரியவில்லை. தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு. நாமக்கல் கவிஞர் எழுதிய வரிகள் இது. அவை வெறும் ஆரவாரம் காட்டும் வரிகள் மட்டுமில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆவணப்படுத்தப்பட்ட நமது பண்டாட்டின் இலக்கிய பெட்டகங்களை முன்னிறுத்தக்கூடிய ஒரு பெருமித முழக்கம் இது.


”கலைகளால் வளர்ந்த திமுக”


கலைகள் என்பது வசதி படைத்த வர்கத்தின் பொழுதுபோக்கு அம்சம் என்று இருந்த நிலையை, அடியோடு மாற்றியது திராவிட இயக்கம் தான். அவற்றை அடித்தட்டு மக்களிடையே எடுத்து சென்றது. திராவிட  இயக்கம் தான் ஒரு சமுதாயத்தில் ஒரு தரப்பினருக்கான சாமர வீச்சாய் அல்ல, சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால், சமத்துவத்திற்கு சமாதி கட்ட நினைத்த போக்குக்கு எதிரான சம்மட்டி அடியாய், மூடப்பழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய்,  கலைகளை மாற்றியது. திராவிட இயக்கம் தான் கலை வடிவங்கள் மூலமாக சாமானிய மக்களின் வாழ்க்கையிலேயே அனுபவித்த வலியை பேசியது. திராவிட இயக்கம் தான் சாமானிய மக்களின் மொழியில் பேசியது. திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது. நாடகம், திரைப்படங்கள், கிராமியக் கலைகள் அனைத்தையும் பயன்படுத்தி மக்களிடையே பரப்புரை செய்தோம்.


கலைஞரின் கலைஞர்களுக்கான ஆட்சி:


கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞரின் வாழ்வின் வளர்ச்சிக்கு கண்ணும் கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. இது கலைஞர் வழிநடக்கும் அரசு. அதனால் தான் இது கலைஞர்களுக்கான அரசாக உள்ளது. அதனால் தான் கலை பண்பாட்டுத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு, கடந்த ஆண்டு 48 கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கலைகளை போதிக்கும் கல்விக்கூடங்களின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும் அரசு தாராளமாக நிதி ஒதுக்கியுள்ளது”, என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.