திருநங்கைகள் மீதான சமூகத்தின் மோசமான பார்வையை மாற்றவும், சகமனிதனை போன்று அவர்களும் வாழ்வில் முன்னேற்றமடையவும் பல்வேறு புதுப்புது திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக மாநிலத்திலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய நிகழ்வு நடந்து இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் தான்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான, பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். இந்நிகழ்வில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)மாரிமுத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 






தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கடந்த மாதம் 4ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த திருநங்கை ஸ்ருதி என்பவர் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வான திருநங்கை என்ற சிறப்பை ஸ்ருதி, விரைவில் தனது பணியை தொடங்க உள்ளார்.