தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும், தற்போதைய இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்கி வருபவர் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். சுருக்கமாக கி.ரா என்று அழைக்கப்படும் அவரது சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் எனும் கிராமம் ஆகும். சுதந்திரம் அடைந்த 10வது ஆண்டான 1958 தனது எழுத்துப்பணியை தொடங்கி, தற்போதுவரை அந்த பணியை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், 99 வயதான அவர் நேற்று இரவு வயது முதிர்வு காரணமாக காலமானார்.

அவரது கதைகள் பெரும்பாலும் கரிசல் மண்ணில் வாழும் மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பிரதிபலிக்கும் வகையில் இருந்ததால், அவருக்கு கரிசல் குயில் என்று புகழாரம் சூட்டப்பட்டிருந்தது. 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே கி.ரா படித்திருந்தாலும் அவர் புதுச்சேரி பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார்.

அவரது தமிழ் எழுத்து சேவையை பாராட்டி, புதுவை அரசு அவருக்கு புதுவையில் வீடு வழங்கியிருந்தது. அதே வீட்டில் வசித்து வந்த அவர் நேற்று மறைந்ததை அடுத்து, அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மிகப்பெரும் எழுத்து ஆளுமையான கி.ரா மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், இலக்கியத் துறையைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(கி.ரா) ஏட்டறிவை காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். வட்டார வழக்கு சார்ந்த இலக்கிய படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும்.

மேலும், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுப்பிக்கப்பட்டு அங்கு அவருடைய புகைப்படங்கள் - படைப்புகள் வைக்கப்படும். pic.twitter.com/oIksxm2sU0
— M.K.Stalin (@mkstalin) May 18, 2021

மறைந்த எழுத்தாளர் கி.ரா படித்த இடைசெவல் ஊராட்சி நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவைப் போற்றும் வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள் மற்றும் படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும். கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா.விற்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் இலக்கிய உலகின் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை பெற்றவர். புதுச்சேரியில் வசித்து வந்த இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.