தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றதுக்குப் பிறகான பிரதமருடனான முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. காணொளியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். 


தமிழ்நாடு தவிர கர்நாடகா, பீகார், அசாம், சண்டிகர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் இந்த காணொளிச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.  கிராமப்புற மற்றும் சிறுநகரங்களில் கொரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கெனவே பின்பற்றிவரும் வழிமுறைகளுடன் பின்பற்றக்கூடிய புதிய கூடுதல் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் தங்களது ஆலோசனைகளைப் பகிர்ந்தனர்.