தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகள் போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கவேண்டும் என்று புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளுக்கு இணங்க, தொழில் அதிபர்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து நிதி அளித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேர்த்த சிறு சேமிப்புகளையும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அறிவிப்பில், “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராள நிதி வழங்க உதவவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமான்ய மக்கள் வரை அனைத்து தரப்பினரும், பெருந்தொற்றை முறியடித்தே தீர வேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும் தங்களால் இயன்ற நிதியை இன்முகத்துடன் வழங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்கள்.
இதில், தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச்சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், உலகப் பொதுமறை திருக்குறள் நூல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவிக்கிறேன்.
திருவள்ளுவரின் குறள் நெறிக்கு இணங்க, இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சக மனிதர்களையும் நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பெறப்படும் இந்த நிதிகள் ஆக்சிஜன் உற்பத்தி, கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஐ.சி.யு, படுக்கைகள், சாதாரண வார்டு படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றின் பயன்பாட்டிற்காகவும், கொள்முதலுக்காகவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சுமார் 70 கோடிக்கு மேல் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.