புதுச்சேரியில் டாடா ஏஸ் டிரைவரரக  வேலை செய்து வருபவரின் 9 வயது மகள், அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகில் விளையாடியபோது திடீரென  மாயமானார். இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


சிறுமி மாயம் 


முத்தியால்பேட்டை போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். சிறுமி மாயமாகி இரண்டு நாட்கள் கடந்தும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை கண்டித்து முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே காலை சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எஸ்.பி. லட்சுமி சவுஜானியா, இன்ஸ்பெக்டர் தனசெல்வம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சிறுமியை மீட்போம் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் போலீசார் கூறியப்படி நேற்று இரவு வரை சிறுமி மீட்கப்படவில்லை.


சிறுமி முத்தியால்பேட்டை எல்லையை தாண்டி செல்லவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் சிறுமி நடந்து சென்ற பகுதியில் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்குகள், குடிநீர் தொட்டிகளில் தவறி விழுந்து இருக்கலாமா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் அப்பகுதியில் உள்ள செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்,


சிறுமி சடலமாக மீட்பு 


இதனைத்தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குழந்தையை தேடும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று  வந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை ஊழியர்களை கொண்டு அப்பகுதியில் உள்ள பெரிய வாய்கால்களிலும் தேடும் பணி தொடங்கினர், அப்போது சிறுமி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வாய்காலில் இறந்த நிலையில் சடலமாக மீட்டனர். தற்போது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முத்தியால்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் குழந்தையை கடத்திய குற்றவாளியை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.