ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனமும்‌ கொலொரடோ மாநில பல்கலைக்கழகமும்‌ இணைந்து கல்வி மற்றும்‌ ஆய்வுத் திட்டங்களை வழங்கும்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டுள்ளனர்‌.


என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்?


பொறியியல்‌, உயிரி மருத்துவம்‌, பொது சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்துவ நுண்ணுயிரியல்‌ ஆகிய துறைகளில்‌ மாணவர்களும்‌, ஆசிரியர்களும்‌ கூட்டு ஆய்வுகளை மேற்கொள்வர். ஒரு பல்கலைக்கழக மாணவர்கள்,‌ மற்ற பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வியும்‌ பயிற்சியும்‌ பெறுவார்கள்‌. அத்துடன், மறுவாழ்வு மருத்துவம்‌, முட நீக்கியல்‌ உயிரி தொழில்நுட்பம்‌, பருவநிலை மாற்றம்‌ மற்றும்‌ மனித நலம்‌, மரபணுவியல்‌ மற்றும்‌ மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ மருத்துவ வைராலஜி ஆகிய துறைகளில்‌ கூட்டு ஆய்வுகளை மேற்கொள்வர்‌.


இந்த நிகழ்வில்‌ ஸ்ரீ இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ உமா சேகர்‌ மற்றும்‌ கொலொரடோ மாநிலப் பல்கலைக்கழகத்தின்‌ அதிபர்‌ அமி பார்சன்ஸ்‌, இந்த கூட்டு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டுப் பரிமாறிக்‌ கொண்டனர்‌.


அப்போது பேசிய உமா சேகர்‌, ’’கடந்த இரண்டு ஆண்டுகளில்‌ இரு பல்கலைக்கழகங்களும்‌ இணைந்து ஸ்ரீ ராமச்சந்திராவில்‌ படிக்கும்‌ நான்காண்டு பட்டப்படிப்பு மாணவர்கள்‌ கொலரேடோ பல்கலைக்கழகத்தில்‌ வலைதள கல்வி மூலம்‌ பயிற்சி பெற்று ஒன்பது கிரெடிட்‌ அம்சங்களை பெற வகை செய்தனர்‌. இதன்‌ மூலம்‌ கொலொரடோ பல்கலைக்கழகத்தில்‌உயர் பட்டப்படிப்பு சேர்வதில்‌ இம்மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள்‌ கிடைக்கும்‌.


கொலொரடோ பல்கலைக்கழகத்தில்‌ ஆய்வு மேற்கொள்ளலாம்


கொலொரடோ பல்கலைக்கழகத்தில்‌ ஆறு மாதம்‌ முதல்‌ ஒரு வருடம்‌ வரை ஆய்வு மேற்கொள்ள விரும்பும்‌ ஸ்ரீ ராமச்சந்திரா மாணவர்களுக்கு இரு பல்கலைக்கழகங்களும்‌ முறையாக ஆய்வுசார்‌ ஒப்புதல்‌ வழங்கி தகுந்த ஆய்வுக்கூடங்களை தெரிவு செய்வர்‌.


ஆசிரியர்களும்‌ ஸ்டெம்செல்‌ மற்றும்‌ கருத்தரிப்பு மருத்துவம்‌, பயோ மெட்டீரியல்ஸ்‌, பருவநிலை மாற்றம்‌ மற்றும்‌ மனித நலம்‌ உயிரி தொழில்நுட்பம்‌, மருத்துவ வைராலஜி ஆகிய துறைகளில்‌ ஆய்வுகளை மேற்கொள்ள முனைவுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அடுத்த கல்வியாண்டு முதல்‌ புதிய பாடத் திட்டம்


இரு பல்கலைக்கழகங்களும்‌ இணைந்து வழங்கும்‌ புதிய பாடத் திட்டங்கள்‌ அடுத்த கல்வியாண்டு முதல்‌ அறிமுகப்படுத்தப்பட உள்ளன’’ என்று கூறினார்‌.


நிகழ்ச்சியில்‌ பேசிய கொலொரடோ மாநில பல்கலைக்கழகத்தின்‌ அதிபர்‌ அமி பார்சன்ஸ்‌, ’’புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மூலம்‌ இரு பல்கலைக்கழகங்களும்‌ இணைந்து கல்வி வழங்கி இணையாக பட்டங்கள்‌ வழங்க வழி செய்துள்ளது. கொலொரடோ மாநில பல்கலைக்கழகம்‌ அமெரிக்காவின்‌ மிக பிரபலமான ஆய்வுசார்‌ பல்கலைக்கழகமாக விளங்குவதால்‌ அதற்கு மிகுந்த அளவில்‌ நிதி ஒதுக்கீடும்‌ கிடைக்கிறது’’ என்று தெரிவித்தார்‌.


புதிய கல்விக் கொள்கையின்படி...


ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ ஆய்வுத்‌ துறை தலைவர்‌ Dr. கல்பனா பாலகிருஷ்ணன்‌ பேசுகையில்,‌ ’’இரு பல்கலைக்கழகங்களும்‌ 2022-ல்‌ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டன. பின்‌ ஆய்வாளர்கள்‌ இரு பல்கலைக்கழகங்களிலும்‌ மாணவர்கள்‌ கல்வி, பயிற்சி பெறவும்‌, ஆய்வுகள் மேற்கொள்வதற்கும்‌ ஏதுவான திட்டங்களை வகுத்தனர்‌. இந்தக்‌ கூட்டு முயற்சி எல்லா மாணவர்களுக்கும்‌ சமத்துவமாக உயர்தர கல்வி வழங்க வழி செய்யும்‌ இந்தியாவின்‌ புதிய கல்விக் கொள்கையின்படி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்‌.