விழுப்புரத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் உலகப்புகழ்பெற்றது ஆகும். ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு நேரில் சென்று வணங்கி பல வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.


திருநங்கைகள் அனைவரும் வழிபட ஆயிரக்கணக்கில் திரள்வதால், அவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்து வழங்கவும் மிஸ் கூவாகம் அழகிப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022ம் ஆண்டுக்கான மிஸ்கூவாகம் அழகிப்போட்டி விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று அசத்தினர். அவர்களின் நடை, உடை, பாவனை, அறிவுத்திறன் உள்ளிட்ட தகுதிப்போட்டிகள் அடுத்தடுத்த சுற்றுகளில் நடத்தப்பட்டது.




இவர்களில் சென்னையைச் சேர்ந்த மெகந்தி மிஸ் கூவாகம் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தை திருச்சியைச் சேர்ந்த ரியானாசூரி வென்றார். மூன்றாவது இடத்தை சேத்தைச் சேர்ந்த சாக்ஷி ஸ்வீட்டி பிடித்தனர். மிஸ் கூவாகம் பட்டத்தைச் சேர்ந்த மெகந்திக்கு பட்டயம் மற்றும் கிரீடம் சூட்டப்பட்டது. மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்த ரியா மற்றும் ஸ்வீட்டிக்கும் பட்டயமும், கிரீடமும் சூட்டப்பட்டது. வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு சக திருநங்கைகள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


மகாபாரதப் போரில் அரவான் தன்னையே பலி கொடுப்பதற்கு முன்பு அவனது திருமண ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்து கொள்வார். ஆணாகிய கிருஷ்ணர் பெண்ணாக அதாவது மோகினியாக மாறியதால் திருநங்கைகள் இந்த நிகழ்வை தங்களது முக்கிய திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.




விழுப்புரத்தில் உள்ள கூவாகம் என்ற கிராமத்தில் கூத்தாண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 18 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்திற்கு வரும் திருநங்கைகள் சாமியின் முன்பு கோவில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர், அன்றைய இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கொண்டாடுவர்கள். அதற்கு அடுத்த நாள் அரவான் பலிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக திருநங்கைகள் தாலிகளை அறுத்து ஒப்பாரி பாடும் நிகழ்வு நடைபெறும்.


இந்த 18 நாட்கள் சிறப்பாக நடைபெறும் இந்த திருவிழாவில் ஒப்பாரி வைக்கும் நாளுக்கு முந்தைய நாள் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் குவிவது வழக்கம். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, வட இந்தியா என இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண