கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் 18-ஆம் தேதி மிஸ் கூவாகம் அழகிப்போட்டி நடைபெற உள்ளது என்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு கலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாததால் நாங்கள் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு கூத்தாண்டவர் திருவிழா நேற்று முன்தினம் சாகை வார்த்தலுடன் தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமாக ஒவ்வொரு நாளும் பாரதம் படிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வாக 19-ந் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி இந்த ஆண்டு மிக பிரமாண்டமான அளவில் மிஸ் கூவாகம் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
மிஸ் கூவாகம் அழகிப்போட்டி: உலக அளவிலான திருநங்கைகள் பங்கேற்கும் மிஸ் கூவாகம் அழகிப்போட்டி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முதல் சுற்றுப்போட்டியும், 2-ம் சுற்றுப்போட்டியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் மிஸ் கூவாகம் 2022-க்கான அழகியை தேர்வு செய்யும் இறுதிப்போட்டி நடக்கிறது.
கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி கோவில் அருகில் திருநங்கைகளுக்கான குடிநீர், உணவு அருந்துமிடம், தங்கும் இடம், உடை மாற்றும் இடம் மற்றும் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து தருமாறு அரசை வலியுறுத்தி கேட்டிருக்கிறோம். தேர் திருவிழா அன்று, தேர் வரக்கூடிய 4 மாட வீதிகளிலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு குடிநீர், அன்னதானம் வழங்க திருநங்கைகள் சங்கத்தை சேர்ந்த 84 தலைவர்களும் ஏற்பாடு செய்துள்ளனர். கூவாகம் கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ளது. இதனால் எங்களுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. அடுத்த ஆண்டு மிஸ் கூவாகம் அழகிப்போட்டியை விழுப்புரத்தில் நடத்துவதா அல்லது உளுந்தூர்பேட்டையில் நடத்துவதா என்பது குறித்து எங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்போம்.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 8 வருட காலமாக திருநங்கைகளுக்கான நலவாரியம் செயல்படவில்லை. ஆட்சி முடிகிற நேரத்தில் கடைசி 2 ஆண்டுகளில்தான் நலவாரியத்தை செயல்படுத்தினர். ஆனால் தி.மு.க. அரசு, திருநங்கைகளுக்கான நலவாரியத்தை செயல்படுத்தி பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது. மானிய கடன், கல்விக்கடன், வேலைவாய்ப்பு இவற்றில் இப்போதுள்ள தி.மு.க. அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இந்நிகழ்ச்சியின்போது வயதான 5 திருநங்கைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், 5 பேருக்கு இளம் திருநங்கைகளுக்கான விருதும் வழங்க உள்ளோம்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை நடிகர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர் என கூறினார்.