சென்னை தியாகராய நகரில் உள்ள வரமஹாலட்சுமி பட்டுசேலை கடையில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து பிரபல நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில் முன்னணி ஜவுளி வர்த்தக நிறுவனமான கலா மந்திர் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலா ​​மந்திர் மட்டுமல்லாது, அதன் தொடர்புடைய கேஎல்எம் ஃபேஷன், காஞ்சி சில்க்ஸ், சாய் சில்க்ஸ், ஸ்வர்ணா காஞ்சி, காஞ்சிபுரம் வரமஹாலட்சுமி ஆகிய  இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 


கடந்த சில ஆண்டுகளாக பட்டுசேலை விற்பனை செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் மகாலட்சுமி கடையின் உரிமையாளர் கோபிநாத் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில் இந்த சோதனையானது நடந்து வருகிறது. இந்த சோதனையில் 5 பேர் கொண்ட குழு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 


மொத்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்படும் 60 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.