சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. 


தங்கம் தென்னரசு வழக்கு


தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு, கடந்த 2006-2011 ஆம் ஆண்டு இருந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீதும், மனைவி மணிமேகலை மீதும்  கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு விசாரணை கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அரசியல் காரணங்களுக்காக அதிமுக ஆட்சியில் அவதூறு வழக்கு தொடரப்பட்டதாகவும், எனவே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னையும், ,மனைவியையும் விடுவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலையை  விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். 


கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழக்கு


2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் , மனைவி ஆதிலட்சுமி, மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்ததாகத் தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இரு தரப்பு வாதங்களும் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் கடந்த ஜூலை மாதம்  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனைவி ஆதிலட்சுமி,தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோரை விடுவித்து விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


வழக்கை கையில் எடுத்த நீதிமன்றம் 


இந்நிலையில் இந்த இரு அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நாளை காலை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.