சந்திரயான் 3 லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதை உறுதிசெய்ய, நிலவில் உள்ளது போன்ற மண் நாமக்கல்லில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த மண், நிலவின் மண்ணை 99 சதவீதம் ஒத்துள்ளது. 


உலகமே உற்றுநோக்கும் தருணம் நாளை (ஆகஸ்ட் 23) மாலை நிகழ உள்ளது. அதாவது நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்க உள்ளது.  


முன்னதாக நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 39 நாட்கள் பயணம் செய்து நிலவை நெருங்கியுள்ள அந்த விண்கலத்தின்  விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தயாராக உள்ளது. தற்போதைய சூழலில் நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க திட்டமிட்டுள்ளது.





இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சோதனை


அதேநேரம், லேண்டரை தரையிறக்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நிலவில் உள்ள சூழல்கள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். அப்போது அனைத்து சூழல்களும் சாதகமாக இருந்தால் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் லேண்டர் தரையிறக்கப்பட்டு அடுத்த 14 நாட்களுக்கு, நிலவு தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.


இஸ்ரோ சென்ற நாமக்கல் மண்


எனினும் விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக தரையிறங்குவதை உறுதிசெய்ய, நிலவில் உள்ளது போன்ற மண் தேவைப்பட்டது. நிலவு மண்ணை ஒத்த, அனோர்த்தோசைட் வகை மண் தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம், வேலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட குன்னமலை, சித்தம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் கிடைப்பது தெரிய வந்தது. இதையடுத்து 50 டன் அளவிலான மண் மற்றும் பாறைகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக புவி தகவல் கோளியல் மைய இயக்குநரும் மண் மாதிரிகளை அனுப்பி வைத்தவருமான அன்பழகன் ’ஏபிபி நாடு’விடம் பேசினார். அவர் கூறியதாவது :


அமெரிக்கா, சீனா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட மன் மாதிரிகளை வைத்துள்ளார்கள். அதை நாம் (இந்தியா) கேட்டால் ஒரு கிலோ, இரண்டு கிலோ என்ற அளவில் ஆய்வுக்காக நமக்கு அளிப்பர். அதன் விலை அதிகமாக இருக்கும். ஆனால் பெரிய அளவில் ஆய்வுக்காக மண் தேவைப்படும்போது அதை அவர்கள் தருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.



இந்த சூழ்நிலையில் இஸ்ரோ, நமக்கான பிரத்தியேக மண் மாதிரியை நாமே உருவாக்க வேண்டும் என்ற முடிவெடுத்தது. அதை நாங்கள் செய்து தர முடிவெடுத்தோம். நிலவு பரப்பு மண்ணுடன் ஒத்துப்போகும் மண் மாதிரியைத் தயார் செய்து,  50 டன்கள் அளவுக்கு  இஸ்ரோவுக்கு அனுப்பினோம். 


மண் மாதிரி சரியாக எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது? அங்கு காப்புரிமை பெற்றது எப்படி?


மண் மாதிரிகளின் வேதியியல் பண்புகள் நிலவின் மண் மாதிரியோடு ஒத்துப் போகிறதா என்று பார்த்தோம். அதேபோல கனிமப் பண்புகள், மண் துகள்களின் அளவு ஆகியவை ஒத்துப் போகிறதா என்றும் ஆய்வு செய்தோம். ஒவ்வொரு வகை மண்ணிலும் பல்வேறு வகையான துகள்கள் வெவ்வேறு அளவில் இருக்கும். அவை எந்த அளவுக்கு ஒத்துப் போகும் என்று காப்புரிமை பெற்றுள்ளோம். அந்த இடத்துக்கு காப்புரிமை பெறவில்லை.


Lunar Soil Simulant தயாரிப்பு செயல்முறைக்குத்தான் பணியாற்றினோம். ஏற்கெனவே அப்பல்லோ 16 விண்கலத்தின் மண் மாதிரியை நாசா வைத்துள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு அதற்கு  ஒத்துப்போகும் வகையில், மண் மாதிரியை உருவாக்கும் செய்முறைக்குத்தான் காப்புரிமை பெற்றோம். நாம் அனுப்பியுள்ள மண் மாதிரி, நிலவின் மாதிரியோடு 99% அளவுக்கு ஒத்துப் போகிறது. 




சந்திரயான் 3 லேண்டர், ரோவர் இந்த மண் மாதிரியில் தரையிறக்கம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதா?


நாம் அனுப்பிய மண்ணைக் கொண்டு இஸ்ரோ ஆய்வுக் கூடத்தை உருவாக்கியுள்ளது. இந்த மண்ணைக் கொண்டுதான் சந்திரயான் 2 ஆய்வு செய்யப்பட்டது. சந்திரயான் 3 விண்கலமும் அங்குதான் ஆய்வு செய்யப்படும். நிலவில் தரை இறங்கும் அனைத்து விண்கலங்களும் அவ்வாறுதான் சோதனை செய்யப்படும். 


அதேபோல லேண்டரின் சக்கரங்கள் ஒத்திசைவு, நிலைத்தன்மை எப்படி உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டிருக்கும். அதேபோல ரோவரின் நகரும் தன்மை  எப்படி இருக்கிறது என்றும் ஆய்வு செய்யப்பட்டிருக்கும். இந்த மண்ணுக்கு விண்கலனின் செயல்பாடு ஒத்துப் போகிறதா என்றும் பார்க்கப்பட்டிருக்கும்.  தங்களுக்குத் திருப்தி ஏற்படும் வரை, தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்டு விஞ்ஞானிகள் பரிசோதித்து இருப்பார்கள். ஆனால் எத்தனை முறை பரிசோதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கான நிரந்தரமான ஆய்வுக்கூடம், இஸ்ரோவில் அமைக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு பெரியார் பல்கலைக்கழக புவி தகவல் கோளியல் மைய இயக்குனர் அன்பழகன் தெரிவித்தார்.


எது எப்படியோ, சந்திரயான் 3 லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதை உறுதிசெய்ய, நிலவில் உள்ளது போன்ற மண் நாமக்கல்லில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.