தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 34 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போதே, முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அப்போது அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் , உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என முதல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திமுக மாவட்ட செயலாளர், முக்கிய நிர்வாகிகள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய துறைகள் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது.இதனால், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ள கொண்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக போர் கொடி தூக்கும் அமைச்சர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமெரிக்கா பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்பார் என கருத்துக்கள் தீவிரமாக பரவியது. ஆனால் இவை அனைத்திற்கும் முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் நிச்சயம் பதவியேற்பார் என பேசினார்.
அதேபோன்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு வருங்காலத்தில் பல வளர்ச்சிகளை அடைய உள்ளது. அதே சமயம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்று தொடர்ந்து மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். இந்த நிகழ்வு விரைவில் நடைபெற வேண்டும் என்று நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த தொண்டர்கள், மக்களின் விருப்பம் என கூறினார்.
அதே போன்று தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிரமாக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை போன்று விறுவிறுப்பாகவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.
ஆகையால் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டும் என தனது கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பதவி ஏற்க உள்ளாரா உதயநிதி ஸ்டாலின்..
திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று முதல் கோரிக்கையை முன்வைத்தவர் அமைச்சர் அன்பில் மகேஷ். அதை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் நிர்வாகிகளும் தங்களுடைய கோரிக்கையை வலுவாக முன் வைத்ததன் அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதேபோன்று தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டும் என்று மீண்டும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்கள், தொண்டர்கள், இளைஞர் அணி சேர்ந்தவர்கள் அனைவரும் கோரிக்கையை வலுவாக முன்வைத்து வருகிறார்கள்.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் இடத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். பேரிடர் காலங்களில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல திட்டங்களை வகுத்துள்ளார்.
தற்போது கூட முதலமைச்சர் வெளிநாடு பயணம் சென்ற பிறகு தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
ஆகையால் முதலமைச்சர் தமிழ்நாட்டில் இல்லாத குறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிரப்பி வருகிறார். ஆகையால் விரைவில் துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து மீண்டும், தமிழ்நாட்டுக்கு வரும்போது, துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அறிவாலயம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.