எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி எது, இங்கிலீஷ் எது, தமிழ் எதுனே தெரியாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல் செய்துள்ளார்.


இந்தி திணிப்பை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் எனவும் அவர்களுடன் தான் திமுக கூட்டணியில் உள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி எது, இங்கிலீஷ் எது, தமிழ் எதுனே தெரியாது. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என பேசியவர் அவர். அவர் கேட்ட கேள்வியெல்லாம் கேட்கிறீர்களே?” என கிண்டல் அடித்தார்.


இதேபோல் புதுகோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் “தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைத்தது திமுகதான் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியதாக” கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி “ஒரு கட்சியை பாரதிய ஜனதாவிடம் அடகு வைத்தது அதிமுகதான். அப்படித்தான் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நான்கரை வருடம் ஆட்சி நடத்தினார்.


நாங்கள் எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கி போவதுமில்லை. அடமானம் வைப்பதும் இல்லை. இந்தியாவிலேயே டெல்லிக்கு எதிராக முதல் குரல் எழுப்புவது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான். டெல்லியில் அடமானம் வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.


எங்களுக்கு சொந்த புத்தி  உண்டு. சொந்த கால்களில் நிற்கும் சக்தி உண்டு. சொந்த மண்ணை காப்பாற்றும் திறமையும் எங்களுக்கு உண்டு. நாங்கள் செய்த சாதனையை பட்டியல் போட்டு சொல்கிறோம். அதில் என்ன பொய் என்று அவர் கூறட்டும். அதற்கு அப்புறம் விவாத மேடையை வைத்துக் கொள்வோம்.


எத்தனையோ முறை சொல்கிறேன். நானே விவாத மேடையில் விவாதிக்க தயார். இந்த அரசு செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல தயாராக உள்ளோம்.


அவர்கள் தோல்வியடைந்த திட்டங்கள் என்னென்ன தந்திருக்கிறோம் என்பதை சொல்வதற்கும் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.