தமிழ்நாட்டின் 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது.

Continues below advertisement

இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானியக்கோரிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் வெளியிட்டார். அவற்றை கீழே காணலாம்.

1.  ஆட்டோமெஷன் ஸ்டாக் மானிட்டரிங் சிஸ்டம்:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான தானியங்கி இருப்பு கண்காணிப்பு அமைப்பு ரூபாய் 50 லட்சம் மதிப்பில் உருவாக்கப்படும்.

Continues below advertisement

2. உணவுப்பொருள் தரம் மதிப்பிட செயலி:

அனைத்து உணவுப் பொருட்களின் தரத்தை மதிப்பீடு செய்ய செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கைப்பேசி செயலி ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

3. 150 நியாய விலைக்கடைகள்:

1500-க்கும் அதிகமான குடும்ப அட்டைகள் கொண்ட நியாய விலைக்கடைகளில் அனைவரும் உணவுப் பொருட்களை எளிதாகப் பெறும் வகையில் முதற்கட்டமாக 150 புதிய நியாய விலைக்கடைகள் பிரித்து அமைக்கப்படும்.

4. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முக அங்கீகார வசதி:

நியாய விலைக்கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கைவிரல் ரேகை, கண் கருவிழி அங்கீகரிப்பில் நிலவும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு முதற்கட்டமாக ரூபாய் 59 லட்சம் செலவில் முக அங்கீகார வசதி( ஃபேஸ் ஆதென்டிகேஷன்) கூடிய விற்பனை முனைய இயந்திரம் 59 லட்சம் ரூபாய் செலவில் முதற்கட்டமாக 150 நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும்.

5. கண்காணிப்பு இணையதளம்:

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் துறைகளை ஒருங்கிணைக்க புதிய ஒன்றிணைந்த கண்காணிப்பு இணையதளம் உருவாக்கப்படும்.

6. ஆய்வு செயலி:

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் மற்றும் அமுதன் அங்காடிகளை கண்காணிக்க அலுவலர்களுக்காக ஆய்வு செயலி உருவாக்கப்படும்.

7. மொபைல் செயலி:

நியாய விலைக்கடைகள், கிடங்கு ஆய்விற்கான கைப்பேசி செயலி உருவாக்கப்படும்.

8. 81 மடிக்கணினிகள்:

மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு 81 மடிக்கணினிகள் ரூபாய் 80 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.

9. விழிப்புணர்வு ஏற்படுத்த 25 லட்சம் ரூபாய் நிதி:

நுகர்வோர் உரிமைகள் குறித்து பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சமூக ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்த ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

10. களப்பயிற்சியுடன் விழிப்புணர்வு:

இளைய தலைமுறையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து களப்பயிற்சியுடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்த ரூபாய் 16 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

11. வாட்ஸ் அப் சேவை:

மாநில நுகர்வோர் சேவைக்காக தானியங்கி உரையாடல் வசதியுடன் கூடிய வாட்ஸ் அப் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

12.  நிலையான செயல்பாட்டு நடைமுறை:

பொது விநியோகத் திட்டப் பொருட்களை கடத்துதல், பதுக்கி வைத்தல் குறித்த பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களின் மீது துரித நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கூட்டாய்வுகளுக்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கப்படும்.

இந்த அறிவிப்புகளை அமைச்சர் வெங்கட்ரமணன் வெளியிட்டுள்ளார்.