இந்தியாவில் அதிவேக ரயில் பயணம்
நவ நாகரீக காலத்தில் எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு இணையாக மக்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே நீண்ட தூர பயணமும் குறைந்த நேரத்தில் சென்று சேர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது. எனவே ஏற்கனவே விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் குறைவான மணி நேரத்தில் சென்று சேரும் நிலையானது உள்ளது. அந்த வகையில் தற்போது வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதனால் 12 முதல் 13 மணி நேரம் என இயக்கப்பட்ட ரயில்கள் 9 மணி நேரத்திலேயே சென்று சேரும் நிலை உருவாகியுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போல புல்லட் ரயிலானது இந்தியாவில் இயக்க திட்டமிடப்பட்டது.
இந்தியாவில் புல்லட் ரயில்
இதற்காக எந்த எந்த வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கலாம் என வழித்தடங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவையான மும்பை – அகமதாபாத் திட்டத்தில் முதல்கட்டமாக சூரத் – பிலிமோரா இடையில் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டில் வரவுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தென் மாநிலங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் இயக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் இன்று சென்னையில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தென் மாநில முதல்வர் மாநாடு- புல்லட் ரயில்
அப்போது பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு தமிழ்நாடு- கர்நாடகா- ஆந்திரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் மூலம் சென்னை- பெங்களூர் வழியாக அமராவதி வரை புல்லட் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் ஏற்கனவே மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்தாக டெல்லி – வாரணாசி ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்தாக 3வது வழித்தடமாக சென்னை- பெங்களூர் இடையே புல்லட் ரயில் திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை டூ பெங்களூர் புல்லட் ரயில்
அந்த வகையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு மொத்தம் 306 கி.மீட்டர் தொலைவில் திட்டமிட்டுள்ள இந்த வழித்தடத்தில் மொத்தமாக 8 ரயில் நிலையங்கள் அமையவுள்ளதாகவும், இதில் தமிழக எல்லையில் 3 ரயில் நிலையங்களும் கர்நாடகாவில் 5 ரயில் நிலையங்களும் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் புல்லட் ரயிலை இயக்கும் பட்சத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடங்களில் செல்லும் வகையில் புல்லட் ரயில் திட்டம் உருவாக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை-பெங்களூர்- அமராவதி புல்லட் ரயில்
இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. அடுத்தாக ஆந்திராவின் அமராவதி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய தென்னிந்தியப் பொருளாதார மையங்களை இணைக்கும் வகையில் எதிர்காலத்தில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னை- பெங்களூர் இடையை புல்லட் ரயில் சேவையானது 2035 ஆம் ஆண்டு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகளின் தகவலாக உள்ளது.
