திருநெல்வேலியில் உள்ள கேடிசி நகரில் கடந்தாண்டு ஜுலை மாதம் பொறியாளர் கவின் என்ற செல்வகணேஷ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த காரணத்தால் அந்த பெண்ணின் சகோதரர் அவரை படுகொலை செய்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
கவின் முதலாவது நினைவு நாள்:
இந்த சூழலில், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது ஊரான ஆறுமுகமங்கலத்தில் இன்று அவரது குடும்பத்தை சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்த வன்னி அரசு:
முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் கவினின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது, ஆணவப்படுகொலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது வன்னி அரசு மேடையிலும், அனிதா ராதாகிருஷ்ணன் கீழேவும் இருந்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சராக பொறுப்பு வகித்தவரை கீழே நிற்க வைக்கக்கூடாது என்ற அடிப்படையில் வன்னி அரசு அவரை மேலே அழைத்தார். அப்போது முதலில் இருக்கட்டும் என்று சைகை காட்டிய அனிதா ராதாகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மேடைக்கு அழைத்து வந்தனர்.
விஜய்யை விமர்சிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்:
பின்னர், அமைச்சர் வன்னி அரசும், அனிதா ராதாகிருஷ்ணன் இருவரும் ஆணவப் படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக மேடைகளில் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவினுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் வன்னி அரசு விரைவில் ஆணவச் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். தவெக கூட்டணியில் இன்று இடம்பிடித்திருக்கும் விசிக, தேர்தல் முடிவுகளுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. தவெக ஆட்சியமைக்க 2 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திருமாவளவன் தனது ஆதரவை அளித்தார்.
