திருச்சி:  செம சூப்பர் வாய்ப்பு... மாணவர்கள் முதல் வேலை தேடுபவர்கள் வரை மத்திய அரசின் இலவச ஏ.ஐ. பயிற்சி அளிக்கிறது. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

Continues below advertisement

புதிதாக உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) உலகில் இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வகையில், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் நபர்கள் அனைவரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் 'இந்திய ஏ.ஐ. இயக்கம்' (IndiaAI Mission) சார்பில் இலவச ஆன்லைன் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி திட்டம் தொழில்நுட்ப உலகில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி, மருத்துவம், வங்கி, வேளாண்மை, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஊடகம் என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு விரிவடைந்து வரும் நிலையில், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை இன்றே மாணவர்களும் இளைஞர்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்த பயிற்சியில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, அன்றாட வாழ்க்கையில் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எதிர்காலத்தில் அதன் தாக்கம் என்ன என்பன போன்ற அடிப்படை விஷயங்கள் முதல் நடைமுறை பயன்பாடுகள் வரை எளிமையான முறையில் கற்றுத்தரப்படுகிறது.

யார் யார் பயனடையலாம்?

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வேலை தேடுபவர்கள், அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியில் சேரலாம். குறிப்பாக கணினி அறிவு குறைவாக இருந்தாலும், ஆரம்ப நிலை பயிற்சியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.

பயிற்சியில் என்னென்ன கற்பிக்கப்படுகிறது?

இந்த இலவச ஆன்லைன் பயிற்சியில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், மெஷின் லேர்னிங் (Machine Learning), ஜெனரேட்டிவ் ஏ.ஐ. (Generative AI), பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models), தரவுப் பகுப்பாய்வு, ஏ.ஐ. கருவிகளின் பாதுகாப்பான பயன்பாடு, பொறுப்பான செயற்கை நுண்ணறிவு, பல்வேறு துறைகளில் ஏ.ஐ. பயன்பாடு உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் விரிவாக விளக்கப்படுகின்றன.

மேலும், ChatGPT போன்ற ஏ.ஐ. கருவிகளை எவ்வாறு திறமையாக பயன்படுத்துவது, வேலைவாய்ப்பிற்கு தேவையான புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியில் ஏ.ஐ.யை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

இந்த பயிற்சி முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. வீட்டிலிருந்தபடியே கணினி அல்லது மொபைல் போன் மூலம் கற்றுக்கொள்ளலாம். வீடியோ பாடங்கள், செய்முறை விளக்கங்கள், சுய மதிப்பீட்டு தேர்வுகள், பயிற்சி செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பு விண்ணப்பங்களிலும் கூடுதல் பலனாக அமையக்கூடும்.

ஏன் இந்தப் பயிற்சி முக்கியம்?

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்கால வேலைவாய்ப்புகளில் ஏ.ஐ. அறிவு முக்கிய தகுதியாக மாறி வருகிறது. எனவே மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரி பருவத்திலேயே இந்தத் திறனை வளர்த்துக்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையை மட்டுமல்லாமல், வங்கி, மருத்துவம், கல்வி, வேளாண்மை, ஊடகம், தொழில்துறை, அரசு சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்து வருவதால், இந்த இலவச பயிற்சி எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கான திறன்களை வளர்க்கும் முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

மத்திய அரசின் இந்த முயற்சி, இந்திய இளைஞர்களை உலகளாவிய தொழில்நுட்ப போட்டிக்கு தயார்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு உலகில் முன்னேற விரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.