தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக கூறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கேலோ இந்தியா இளைஞர் போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 1600க்கும் மேற்பட்ட பணியாளர்கள்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள், 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கேலோ போட்டியின் தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க தமிழக அரசு திட்டமிட்ட நிலையில் அதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். தொடர்ந்து நேற்று அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார். மேலும் அதன் தொடக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
பின்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருவதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறும் வலியுறுத்தினேன்.அதனை கண்டிப்பாக நிறைவேற்றி தருகிறேன் என சொன்னார். பின்னர் சகோதரர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை’ எனவும் கூறினார்.