விடியல் பயணத் திட்டத்தில் 520 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர் என்றும் 1 கோடியே 15 இலட்சம் மகளிர்க்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக திமுக செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.


சென்னை திருவொற்றியூர் பகுதியில் 2,099 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.


அப்போது பேசிய அவர், "கருணாநிதி தலைமையிலான கழக அரசாக இருந்தாலும் நம்முடைய முதலமைச்சர் அரசாக இருந்தாலும் எளிய அடித்தட்டு மக்களுடைய நடுத்தர மக்களுடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைத் தருகின்ற அரசாகவே நம்முடைய கழக அரசு திராவிட மாடல் அரசு செயல்பட்டுள்ளது.


தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாகத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. சென்ற ஜூலை மாதம் கூட 925 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 5,600 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நம்முடைய முதலமைச்சர் திறந்து வைத்தார்.


அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதிகளை உடனடியாக வழங்கிடும் திட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த வட சென்னை பகுதியுடைய நலனைக் கருத்தில் கொண்டு ரூபாய் 4,000 கோடி மதிப்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர்க்குக் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், இதுவரை 520 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.


ஒவ்வொரு மகளிரும் கிட்டத்தட்ட மாதம் ஆயிரம் ரூபாய் இந்த விடியல் பயணம் மூலமாகச் சேமிக்கின்றார்கள். மகளிரின் சுமையைக் குறைக்கின்ற வகையில் முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்கள்.


இத்திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 20 இலட்சம் குழந்தைகள் பயனடைகிறார்கள். இந்தத் திட்டம் ஊரகப் பகுதிகளில் இருக்கிற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் விரிவுபடுத்தியுள்ளார்கள்.


புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் கல்லூரிக்குச் செல்லும் 6.25 இலட்சம் மாணவ மாணவியர் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பெறுகிறார்கள். 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதம் 1,000 வீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றார்கள்.


இப்படி நம்முடைய அரசு தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சியையும் கருதி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். இந்தத் திட்டங்களால்தான் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் என 13 துறைகளில் இந்தியாவிலே முதலிடம் பெற்றுள்ளது. நம்முடைய தமிழ்நாடு அரசினுடைய சாதனைகளில் ஒன்றாக, இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது" என்றார்.