தாழ்தள பேருந்து இயக்கம்:


சென்னையில் தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 88 புதிய பேருந்துகள், 12 பழைய புதுப்பிக்கப்பட்ட பேருந்து என மொத்தம் 100 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டுள்ளன.  சென்னையில் முக்கிய வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேருந்துகள் மாற்றுத்திறனாளி பயணியர் சக்கர நாற்காலியுடன் பேருந்தில் ஏறி பயணம் செய்யும் வகையில் இந்த பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி:


பொதுவாக மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறி இறங்க மிகவும் சிரமப்படுவதுண்டு. இவர்களி சிரமங்களை போக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு தாழ்தள பேருந்துகளை இன்று முதல் இயக்கியுள்ளனர். குறிப்பாக சாலையில் இருந்து பேருந்திற்குள் ஏறும் பொழுது உயரம் இருக்கும். இந்த உயரத்தை சாலையின் தன்மைக்கேற்றால்போல குறைக்கவும் அதிகரிக்கவும் முடியும் வகையில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தினுள் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி அதனுடனே அமரும் வண்ணம் தனி இடவசதியும் இந்த பேருந்துக்களில் அமைக்கப்பட்டுள்ளது.




பேருந்து சேவை நிறுத்தமும், நீதிமன்ற உத்தரவும்:


சென்னையில் கடந்த 2018 வரை இந்த தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அதன் பிறகு இந்த சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை  ஐகோட்டில் மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர்  வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தமிழக அரசு ஒரு சில வாதங்களை முன்வைத்தது. குறிப்பாக தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கு அதிக அளவில் செலவு ஏற்படுகிறது. அதோடு பேருந்துகள் தாழ்வாக இருப்பதால் மழை நீர் எளிதில் புகுந்து விடுகிறது. மேலும் குறுகலான சாலைப்பகுதியில் இந்த பேருந்துக்களை இயக்குவதில் சிரமமும் உள்ளது.  இதனால் இந்த பேருந்துக்களை வாங்குவதில்லை என்று தெரிவித்தது. இருப்பினும் தாழ்தள பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவும் குறைந்தபட்சம் 350 பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும்  நீதிமன்றம் கூறியிருந்த  நிலையில் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கிய தமிழக அரசு இன்று முதல் 100 பேருந்துகளை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.