கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ஒன்பது லட்சம் பேர் மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள் அதனை பரிசீலித்து வருகிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களை பேச அனுமதிக்கவில்லை என கூறி வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் தனியாக நின்று ஆர்.பி உதயகுமார் பேசினார்.
அப்போது, “மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி சார்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. இந்த மெசேஜ் பல இடங்களில் எங்களுக்கு இன்னும் வரவில்லை என்று அரசு அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். எனவே பல வரைமுறைகளை வைத்துள்ளனர்” என கூறினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “ ஒரு கோடி பேருக்கு வழங்குவதாக பேரவைகள் தெரிவித்து இருந்தாலும், ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு அரசு மகளிர் உரிமைத் தொகை வழங்கி இருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் நோக்கில் விண்ணப்பிக்க கால அவகாசமும் கொடுத்திருக்கிறோம். இப்போது ஒன்பது லட்சம் பேர் மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பரிசலிப்போம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயம் கொடுக்கப்படும். உங்களிடத்தில் யாராவது சொன்னால் உறுப்பினர்கள் அதை கொடுத்தால் அதையும் நிச்சயமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சியில் இருந்து வந்தாலும் தகுதியானவர்களுக்கு உறுதியாக வழங்கப்படும். பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு ஒரு முறை மட்டுமே பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் மாத அதை மாற்றி மாதந்தோறும் கொடுத்து வருகிறோம்.
நிதிநிலை சரியாக இருந்தால் இந்த திட்டம் வந்த உடனே அமலுக்கு வந்திருக்கும். தற்போது நிதிநிலை சரி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களுக்கு கொடுக்கப்படாமல் இல்லை. குறை சொல்வதற்காக எதிர்க்கட்சி எதையாவது சொல்லக்கூடாது. ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். எங்கு எப்போது யாரால் நிராகரிக்கப்பட்டிருக்கின்ற என்ற விவரங்களை எங்களிடம் கொடுங்கள்” என பேசினார் முதலமைச்சர்
அதனை தொடர்ந்து, மேல்முறையீடு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது தொழில்நுட்ப ரீதியாகவும் மேல்முறையீடு செய்யப்பட முடியவில்லை என அதிமுக ஆர்பி.உதயக்குமார் குற்றம் சாட்டினார்.
அதற்கு மகளிர் உரிமை திட்டம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சிறப்பு திட்ட அமலாக்க துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “தகுதியுள்ள உழைக்கும் மகளிர் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 1 கோடி 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 கோடி மகளிர் பயனடைந்துள்ளனர். 1065 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மகளிர் கொண்டாடி வருகிறார்கள். மகளிர் உரிமை திட்டத்திற்கு ஒரு கோடியே 62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான கள ஆய்வுகள் வெளிப்படையாக செய்யப்பட்டது. எவ்வித குறிக்கிடும் இல்லாமல் ஆய்வு செய்யப்பட்டது மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறார்” என தெரிவித்தார்.